ஆயுள் தண்டனை! தீபச்செல்வன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நுண்கலைக் கல்லூரியின் அதிபராகச் செயற்பட்ட கண்ணதாசன் என்ற முன்னாள் போராளிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னைய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்பட்டே கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு முன்னாள் போராளிகள் அனைவரது வாழ்விலும் பெரும் அதிர்வை உண்டு பண்ணியுள்ளது. அத்துடன் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமா? ஆயுள் தண்டனை கிடைக்குமா? என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்தியுள்ளமையும் கவனிக்கப்பட வேண்டியது.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்ட இன அழிப்புப் போரின்போது, பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அனைத்து விடுதலைப் புலி உறுப்பினர்களையும் சரணடையுமாறும் இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இலங்கை அரசாங்கம் இறுதிப் போரின்போது வழங்கிய பல வாக்குறுதிகளை அந்தப் போர்க்களத்திலேயே மீறியது. சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பதை நம்பிச் சென்ற அப்பாவித் தமிழ் இளைஞர் யுவதிகள் சித்திரவதை செய்யப்பட்டும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டும் மிகவும் கொடூரமாக – மனித குலத்திற்கு விரோதமான முறையில் இன அழிப்பு செய்யப்பட்டனர்.

சரணடைந்த பெண் போராளிகள் இறுதிப் போர்க்களத்தில் எவ்வாறு கொன்று வீசப்பட்டார்கள் என்பதற்கான சாட்சியங்கள் பல வெளிவந்துள்ளன. சரணடைந்த ஆண் போராளிகள் நிர்வாணமாக இருத்தப்பட்டு பிடரிகளில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டதும் உடலில் கத்தியால் கீறி இராணுவத்தினர் கொலை விளையாட்டுப் புரிந்தமையையும் இந்த உலகு அறியும். அத்துடன் ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் பல்லாயிரம் பேரின் கண்களுக்கு முன்னால் போராளிகளின் குடும்பங்களால் ஒப்படைக்கப்பட்ட போராளிகள், மற்றும் போராளிக் குடும்பங்கள் பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

அவர்கள் எல்லோரும் காணாமல் போனதாக இலங்கை அரசு கைவிரித்தது. அப்பாவித் தமிழ் மக்களும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பதை நம்பிச் சரணடைந்த அல்லது குடும்பங்களால் சரணடைய வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் காணாமல் ஆக்கிய- அந்த நேரத்தில் குறித்த இடங்களில் கடமை புரிந்த இராணுவத்தினர், இராணுவ அதிகாரிகள்மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? மாறாக அவர்களுக்கு பதவி உயர்வுகளும் வீரர்கள் என்ற விருதுகளும் பரிசளிக்கப்பட்டன. தமிழ் மக்கள்மீதான தமிழ்ப் போராளிகள் மீதான பாரபட்சம் இப்படித்தான் வெளிப்படுகிறது. தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறை இப்படித்தான் வெளிப்படுகிறது.

தமிழ் மக்கள், இலங்கை அரசின் இனப் பாரபட்சத்திற்கு எதிராக, இன ஒடுக்குமுறைக்கு எதிராக, இன ஆதிக்கத்திற்கு எதிராக, உரிமை மறுப்புக்கு எதிராக – அதாவது ஒரு நியாயமான காரணத்திற்காக போராடுகின்றனர். அந்த கொள்கைகக்காகவே தமிழ்ப் போராளிகள் ஆயுதம் ஏந்தும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டனர். இலங்கை அரசாங்கம், காலம் காலமாக தமிழ் இனத்திற்கு எதிராக, எப்படியான கட்டமைக்கப்பட்ட இன ஒடுக்குமுறையை நுட்பமாக முன்னெடுக்கிறதோ அவ்வாறே தமிழ் போராளிகளின் அழிப்பு விடயத்திலும் அதற்குப் பிந்தைய கால கட்ட நீதி அணுகுமுறைகளிலும் செயற்படுகிறது.

பல்வேறு கொடூரக் குற்றங்களைப் புரிந்த, மனித குலத்திற்கு விரோதமான குற்றங்களைப் புரிந்தவர்கள் உலவித் திரிய, பொதுமன்னிப்பு வழங்குவதாக கூறப்பட்டு சரணடைந்து, புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தண்டனை வழங்குவது நியாயமற்றது. அப்படி என்றால் எதற்காக போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது? எதற்காக புனர்வாழ்வு வழங்கப்பட்டது? தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் ஒவ்வொரு போராளிகளும் அந்த இயகத்தின் பணியை ஆற்றியவர்கள். இயக்கம் சார்ந்த பணியை ஆற்றிய ஒவ்வொருவரையும் அவர்கள் ஆற்றிய பணிக்காக ஒரு வழக்கு மூலம் தண்டிக்க முடியும் ஒடுக்க முடியும் என்ற அச்சுறுத்தலை இந்த நிலை ஏற்படுத்துகிறதல்லவா?

பொதுமன்னிப்பு என்ற பெயரில் பல போராளிகள் அழிக்கப்பட்டனர். பல போராளிகள் காணாமல் ஆக்கப்பட்டனர். புனர்வாழ்வு என்ற பெயரில் பல போராளிகள் உள்ளத்தால் அழிக்கப்பட்டனர். வாதைகளுக்கு உள்ளாக்கப்பட்னர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்களை பற்றிய தகவல்களை வெளியிடு என்று தமிழ் மக்கள் போராடுகிறார்கள். அழிக்கப்பட்டவர்களுக்காக நீதியை வழங்கு என்று கோரி தமிழினம் போராடுகிறது. இந்த நிலையில் எஞ்சியவர்களையும் – மீதம் இருப்பவர்களையும் இழப்பதுதான் இலங்கையின் நீதி என்றால் இது ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு எதிரான அநீதியல்லவா?

இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக எத்தனையோ படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளன. மனித உரிமையாளர்கள், ஊடவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதனை நிகழ்த்தியவர்களும் அதற்கு ஆணை வழங்கியவர்களும் இன்று பதவிகளிலும் சுகபோகமாகவும் வாழ்ந்து வருகின்றனர். உரிமைக்காக போராளிகள் ஆயுதம் ஏந்தினர். அதனை பயங்கரவாதம் என்றது இலங்கை அரசு. இலங்கை அரசின் பார்வையில் தமிழ் இன விடுதலையை வலியுறுத்தி ஒரு பாடலைப் பாடினாலும் ஒரு பாடலுக்கு மேளம் இசைத்தாலும் அவர்கள் பயங்கரவாதிகள்தான்.

கண்ணதாசன் ஈழத்தின் இசைத்துறை சார்ந்த கல்வியியலாளர். புனர்வாழ்வு என்ற வதைமுகாமின் பின்னர், தனது புலமைத் திறமையால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை விரிவுரையாளராகினார். அமைதியாக இசைத்துறை சார்ந்தும், இசை உயர் கல்வி சா்ர்ந்தும் அவர் செயற்பட்டு வந்தார். சமூகத்திற்கு முன்னூதாரணமாக செயற்பட்டு வந்த நிலையிலேயே அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களை கொன்று தீர்த்து, இன்னும் வெறியுடன் அலைபவர்களை பாதுகாக்கும் நாட்டில், தன் இனத்திற்காக ஆயுதம் ஏந்திப் போராடி, அப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் அமைதியாக முன்னூதாரணமான வாழ்வை வாழும் தமிழர்களின் இன்றைய நிலை இதுதான்.

உரிமை மறுக்கப்பட்டவர்களாய், நீதி மறுக்கப்பட்டவர்களாய், வீடு திரும்பாதவர்களாய், நிலம் இழந்தவர்களாய், காணாமல் ஆக்கப்பட்டவர்களாய், சிறைக் கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டவர்களாய் இன்னும் பலவாறு விதமாக ஆயுதள் தண்டணையை அனுபவிப்பவர்கள் ஈழத் தமிழர்கள். இன்னுமின்னும் சிறைகளும் ஒடுக்குமுறைகளுமே எம்மைச் சுற்றி வளர்கின்றன. தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படுகின்றன. எதிர்கொண்டவைகளுக்குள் இழந்தவைகளுக்கும் இந்தத் தீவில் நீதி கிடைக்காது என்பதையே மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றனர். இத் தீவில் மெய்யான நீதி நிலவியிருக்குமெனில் தமிழ் இனம் விடுதலையுடன் சுதந்திரத்துடன் உரிமையுடன் வாழ்ந்திருக்கும். ஒடுக்குமுறையை அழிப்பை சந்திக்க வேண்டிய நிலைமைகளும் ஏற்படாது.

-தீபச்செல்வன்

You might also like More from author

Loading...