தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற தமிழருக்கான நூலக திறப்பு விழாவும் கவி நூல் வெளியீடும்..

கடந்த  டிசம்பர் மாதம் 30ம் திகதி  பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட் நகரில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தமிழருக்கான நூலக திறப்பு விழாவும் கவி நூல் வெளியீடும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஈழத்து படைப்பாளரும் மருத்துவப்போராளியுமான வைத்திய கலாநிதி திரு. சுஜந்தன் அவர்களின் கவி நூல் வெளியீடு  மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

உலகத்தமிழர் அனைவருக்கும் உரித்துடைய பொது நிலத்தில் தமிழரின் வரலாற்று முக்கியத்துவங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்கும் நோக்குடன் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்றான நூலகத்தின் ஆரம்ப கட்டமாக அடையாள நூலக கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு இளையோர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நூலகம்  தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஈழத்து எழுத்தாளரான வைத்திய கலாநிதி கா. சுஜந்தன் அவர்களின் படைப்பில் ‘அகதியின் குழந்தை’ எனும் கவிதை நூல் உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் தமிழர் கல்வி கலை பண்பாட்டு நடுவத்தின் வெளியீட்டுப்பிரிவினால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டப்பட்டது.

மாமனிதர், வைத்திய கலாநிதி . கெங்காதரன் அவர்களின் நினைவாக உருவான ‘அகதியின் குழந்தை’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் உலகத்தமிழர் வரலாற்று மையம், தமிழர் கல்வி, கலை பண்பாட்டு நடுவம் மற்றும் வெளியீட்டகம் சார்பாக உரையாற்றிய திரு. புரட்சி அவர்களை தொடர்ந்து திரு. அருண், வைத்திய கலாநிதிகளான திரு. வாமன் மற்றும் திரு. தணிகை ஆகியோரால் நூலாசிரியர் பற்றிய அறிமுக உரைகளை நிகழ்த்தினார்கள்.

தாயக விடுதலை பயணத்தில் அரும்பங்காற்றிய மூத்த வைத்திய கலாநிதி. திரு. சோமசுந்தர ராஜா அவர்களின் ஆசியுரையினை தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது.

நூலின் முதல் பிரதியினை தமிழீழ மருத்துவத்துறை பொறுப்பாளர் திரு. மனோஜ் அவர்கள் வெளியிட்டு வைக்க வைத்திய பெருந்தகைகளும், புலம்பெயர் அமைப்புகளின் பிரதி நிதிகளும் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

நூல் வெளியீட்டு நிகழ்வில் போராளி கவிஞர். வாணன் ( காந்தள்), திருமதி. ரேணுகா உதயகுமார், போராளி கவிஞர். இன்பன், தமிழ் ஆய்வு மையத்தை சேர்ந்த திரு. திவாகரன் ஆகியோர் நூல் பற்றிய தமது பார்வையை வழங்க ஊலகவியலாளர் மற்றும் ஆய்வாளர் திரு.தினேஸ் அவர்கள் நூலுக்கான திறனாய்வு உரையினை நிகழ்த்தினார்.

நூலாசிரியர் சார்பாக பொருளியலாளரும் ஆய்வாளரும் நீண்ட கால தேசிய செயற்பாட்டாளருமான ஆசிரியர் திரு. க.பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்புரையினை நிகழ்த்தினார்.

நிகழ்வின் இறுதியாக நூல் வெளியீட்டின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியானது தாயக குழந்தைகளின் உயர் கல்விக்காக உதவும் நோக்குடன் மக்கள் நலன் காப்பகத்தின் பிரதிநிதியிடம்  கையளிக்கப்பட்டது.

அதோடு  உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிமைகளில் நடாத்தப்படும் வணக்க நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வுகளில் ஏராளாமான பொது மக்களும் இளையோரும் போராளிகளும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதி நிதிகளும் ஏனைய தமிழின ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தினேசன் சிறிதரன்(Thinesan Sritharan)

Comments
Loading...