தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக குத்துச்சண்டை போட்டி இன்று டெல்லியில் ஆரம்பம்…

10-வது உலக பெண்கள்  குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் 72 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

2006-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது.

மேரிகோம் (48 கிலோ எடைப்பிரிவு) தலைமையில் களம் காணும் இந்திய அணியில் சரிதா தேவி, பிங்கி ஜங்க்ரா, மனிஷா மான், சோனியா, சிம்ரஜித் கவுர், லவ்லினா போர்கோஹைன், சவீத்தி பூரா, பாக்யபதி கச்சாரி, சீமா பூனியா ஆகியார் இடம் பிடித்துள்ளனர்.

2016-ம் ஆண்டு உலக போட்டியில் மகுடம் சூடிய இத்தாலியின் அலிசியா மெசியானோ (பெதர் வெயிட் பிரிவு), 81 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான பிரிவின் நடப்பு சாம்பியன் யாங் ஸியாலி (சீனா), வெள்ளிப்பதக்கம் வென்ற கைய் ஸ்கோட் (ஆஸ்திரேலியா), ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்ற மிரா போட்கோனென் (பின்லாந்து),

மற்றும் முன்னணி நட்சத்திரங்களான பியாம்விலாய் லாபியாம் (தாய்லாந்து) அனஸ்டசியா பெலியக்கோவா(ரஷியா), விர்ஜினியா புச்ஸ் (அமெரிக்கா), லின் யு டிங் (சீனதைபே) உள்ளிட்டோரும் இந்த போட்டியில் வரிந்து கட்டுவதால் இந்திய வீராங்கனைகள் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இந்த நிலையில்  தமக்கு குறைந்தது 3 பதக்கங்கள் கிடைக்கும் என இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் எதிர்பார்க்கிறதகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம் மீண்டும் சாதிக்க வாய்ப்புள்ளது. 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான மேரிகோம், 6-வது முறையாக தங்கப்பதக்கத்தை அறுவடை செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

செர்பியா நாட்டில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு பிரிந்த கொசோவாவை இந்தியா தனிநாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கொசோவாவை சேர்ந்த வீராங்கனை டான்ஜிட்டா சாதிகு மற்றும் இரண்டு பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசு இன்னும் ‘விசா’ வழங்கவில்லை.

இதேவேளை  கொசோவாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில்  ‘விசா’ பிரச்சினையை இந்தியா சரிசெய்யாவிட்டால், எதிர்காலத்தில் பெரிய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.

Comments
Loading...