தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒரேயடியாக இவ்வளவு கொடுக்க முடியாது, இந்த ஸ்மார்ட்போன் போதும்!

சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் விலை கடுமையாக உயர்ந்திருப்பது சமீபத்திய ஆய்வில் தெளிவாக தெரியவந்துள்ளது. இத்துடன் சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்கள் ஏகபோகமாக வழங்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கவே விரும்புகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விலை நம் கணிப்புகளை கடந்து எக்கச்சக்கமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் X விலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா போன்ற சந்தைகளில் அதிகமாக இருந்த நிலையில், இந்தியாவில் இவை பெரும்பாலானோருக்கு இமாலய இலக்காக இருந்தது, இருந்தும் வருகிறது.

கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 8 விலை ரூ.66,120 துவங்கி டாப் எண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் X விலை ரூ.92,430 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை 64 ஜிபி வேரியண்ட் ஐபோன்களுக்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018-இல் இந்த விலை மேலும் அதிகரிக்கப்பட்டு ஐபோன் X 64 ஜிபி விலை தற்தசயம் ரூ.95,390 என்றும் 256 ஜிபி விலை ரூ.1,08,930 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அதிசிறந்த அனுபவத்தை வழங்கினாலும், இவற்றின் விலை இமயம் போன்று நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனாலேயே வாடிக்கையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்க காரணமாக அமைகிறது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே அறிக்கையில் கவுன்ட்டர்பாயிண்ட் நடத்திய ஆய்வில் உலகம் முழுக்க விற்பனை செய்யப்படும் பத்து ஸ்மார்ட்போன்களில் ஒன்று புதுப்பிக்கப்பட்டவை அல்லது பயன்படுத்தப்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை விட பாதி விலையில் கிடைக்கும் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் கிட்டத்தட்ட புது ஸ்மார்ட்போன் போன்றே வேலை செய்கின்றன.

இவ்வாறான நடைமுறை வாடிக்கையாளர்களுக்கு லாபகமாக இருந்தாலும், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இவை எதிர்காலத்தில் ஆபத்தாக முடியலாம். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சரிந்து வரும் நிலையில், புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கான தேடல் இணையத்தில் அதிகரித்திருக்கிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியாகும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் தரம் மேம்பட்டு இருப்பதால் ஏற்கனவே பிரீமியம் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் புதிய சாதனங்களை நாடும் போது அவர்களுக்கு கணிசமான தொகையை பெற்று தருகிறது.

Comments
Loading...