தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கம்ப்யூட்டர் கீ போர்ட் கிருமிகள் உடலை பாதிக்கும் – மருத்துவர்கள் எச்சரிக்கை

கிருமிகள் நிறைந்திருக்கும் கம்ப்யூட்டர் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுவலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சில வேலைகளை செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து நாம் கைகால்களை உத்தம் செய்கின்றோம்

ஆனால்  கழிப்பறையைவிட 6 மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரி பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அழுக்குப்படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக்கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நினைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிகள் அதிகமாக இருக்கின்றதாம்.

கம்ப்யூட்டர் கீ போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில்தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாக கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம்.

அந்தவேளையில் கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது. அதில் ஒரு கம்ப்யூட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீரியா அளவைவிட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன.

பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.

அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவறையிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலிபார்ம்ஸ், ஸ்டெபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப்பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.

தனி நபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தை பொறுத்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப்பும் அமைகிறது.

பலர் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளை சரியாக சுத்தம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டு கைக்குட்டையால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவதும் சகஜம். இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும்.

யாருக்காவது சளியோ, இரப்பை குடல் அழற்சியோ இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போதும். அவருடைய நோய்கள் நமக்கும் மிக எளிதாக தொற்றிவிடும் என கூறுகின்றன ஆய்வுகள்.

Comments
Loading...