தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கார்பன் அறிக்கை வெளியாகவுள்ள நிலையில் மன்னார் மனித புதைகுழியில் சிறுவனின் எலும்புக்கூடு கண்டெடுப்பு

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளின்போது சந்தேகத்திற்கிடமான சிறுவனின் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கபபட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த மனித எலும்புக்கூட்டின் அருகில் உலோக பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை அவர் உறுதி செய்யவில்லை.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 145ஆவது நாளாக இன்று (வியாழக்கிழமை) காலை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. குறித்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான சிறுபிள்ளை ஒன்றின் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டு சுத்தப்படுத்துவதற்காக மத்திய பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த எலும்புக்கூடு 18 வயதுக்குற்பட்ட சிறுவனுடையது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் குறித்த அறிக்கை வெளிவரவில்லை. இன்று மாலைக்குள் அல்லது நாளை முடிவுகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 316 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், 307இற்கும் மேற்ப்பட்ட மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...