தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காற்றின் ஓலம்!

கங்குல் நிறைந்த கார்வேளை,
கந்தக முகில்களால் எம் வானம் களையிழந்து போனதைக் கண்டும்
காணாமல் கடந்து வந்தோம்
காவிச்சுமந்த உயிர் கொண்டு,

வங்கக் கடலின் அலை மோதும்
வட்டுவாகல் பாலமதில்
வழியில் உடல்கள் பல கடந்து
வரிசை வரிசையாய் நின்றிருந்தோம்
வாழ்வை இரந்து வேண்டுதற்கு…

சிங்களச் சிப்பாய்கள் குதூகலத்தில்
சினமும் நாங்கள் கொள்ளவில்லை
சீறிப்பாய்ந்த மறம் தொலைத்து
சிறகுகள் எரிந்த பறவைகளாய்
சிரங்கள் தாழ்த்தி நின்றோமே…

தங்கை, தமக்கை பார்க்கவில்லை,
தாயாரென்றும் நினைக்கவில்லை
தமையன், தகப்பன், தம்பி முன்னால்
அங்கம் போர்த்திய ஆடை களைத்து
அசிங்கம் செய்து பார்த்தாரே…

ஏங்கோ வீசிய காற்று வந்து
எண்ணவலையில் ஓலமிட்டு
எல்லாம் முடிந்த பின்னாலே
அங்குல நிலமும் உனக்கில்லை
அம்மணமானதுன் வாழ்வென்று
அறைந்து சொல்லிப்போனதன்று…
-காந்தள்-

Comments
Loading...