தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிங்ஸ்மேன் தி கோல்டன் சர்க்கிள் – அதிரடி சரவெடி

கிங்ஸ்மேன் இரகசிய அமைப்பு முதல் பாகத்தை தொடர்ந்து உருவாகியிருக்கும் இந்த பாகத்தில் டெய்லர் கடை ஒன்றின் உள்ளே கிங்ஸ்மேன் இரகசிய அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதில் ரகசிய ஏஜென்ட்டாக வரும் நாயகன் தரோன் ஈகர்தன், போதைப் பொருள் உட்கொண்ட ஒருவர் இறந்தது குறித்த ரகசிய விசாரணையை ஆரம்பிக்கிறார். அந்த விசாரணையின் தொடக்கத்தில் இறந்தவரது உடலில் தங்க நிறத்தில் வட்ட வடிவத்திலான அடையாளம் இருப்பதை பார்க்கிறார்.

இதையடுத்து இந்த விசாரணைக்கு தி கோல்டன் சர்க்கிள் என்று பெயர் வைத்து, இதுகுறித்த தீவிர விசாரிணையில் ஈடுபடுகிறார். இந்நிலையில், அவரது காதலியை பார்ப்பதற்காக ஈகர்தன் பிரிட்டன் செல்கிறார். அந்த சமயத்தில் அவரது ரகசிய அமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டு அந்த அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. மேலும் கிங்ஸ்மேன் ரகசிய ஏஜென்ட்கள் அனைவரும் இறந்து விடுகின்றனர்.

இந்நிலையில், கிங்ஸ்மேன் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்த விசாரணையில் ஈடுபடும் ஈகர்தன், கிங்ஸ்மேன் ரகசிய அமைப்பில் கணினி வேலைபாடுகளில் சிறந்தவரான மார்க் ஸ்ட்ராங் உயிரோடு இருப்பதை கண்டுபிடிக்கிறார். அவருக்கும் கிங்ஸ்மேன் தாக்குதலுக்கும் சம்மந்தம் இருக்குமோ என்று ஆராயும் போது, கிங்ஸ்மேன் தாக்குதலுக்கு கோல்டன் சர்க்கிள் காரணம் என்பது தெரிய வருகிறது.

இதையடுத்து ஸ்டேட்ஸ்மேன் என்ற ரகசிய அமைப்பின் உதவியுடன் கோல்டன் சர்க்கிள் குறித்த விவரத்தை கண்டறியும் போது அதன் பின்னணியில் ஜுலியானா மூர் இருப்பது தெரிய வருகிறது. மேலும் கிங்ஸ்மேன் உருவாவதற்கு காரணமாக இருந்த காலின் பிர்த் முதல் பாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது போல் காட்டப்பட்டிருக்கும். ஆனால் அவர் இந்த பாகத்தில் உயிருடன் திரும்ப வருகிறார்.

முதல் பாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட காலின் பிர்த் எப்படி உயிருடன் வந்தார்? அதில் இருக்கும் மர்மம் என்ன? கிங்ஸ்மேன் தாக்குதலுக்கு காரணம் யார்? கோல்டன் சர்க்கிளை நடத்தி வரும் ஜுலியானா மூர் பிடிபட்டாரா? அதன் பின்னணியில் நடந்து என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒரு ரகசிய ஏஜென்ட்டாக தரோன் ஈகர்தன் சிறப்பாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அவரது நடிப்பு மிரள வைக்கும்படி இருக்கிறது. காலின் பிர்த், மார்க் ஸ்ட்ராங், ஹலே பெர்ரி, எல்டான் ஜான், சானிங் டாடம், ஜெஃப் பிரிட்ஜஸ் என அனைவரது நடிப்புமே சிறப்பாக இருக்கிறது. வில்லியாக நடித்திருக்கும் ஜுலியானா மூர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிரட்டி இருக்கிறார்.

குற்றச் செயல்களை கண்டுபிடிக்கும் ரகசிய அமைப்பை மையமாக வைத்து அதிரடி, த்ரில்லர் கதையாக இயக்கியிருக்கிறார் மேத்யூ வாகன். கதையின் போக்குக்கு ஏற்ப பல திருப்பங்கள் வந்தாலும், திரைக்கதை மெதுவாக இருப்பதால் படம் மீதான சுவாரஸ்யம் குறைகிறது.

ஹென்றி ஜேக்மேன், மேத்யூ மர்கீசனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஜார்ஜ் ரிச்மண்டின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `கிங்ஸ்மேன்: தி கோல்டன் சர்க்கிள்’ அதிரடி சரவெடி.

Comments
Loading...