தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கூட்டு முயற்சியால் இலங்கையை வென்றோம்! கேப்டன் ரோகித்சர்மா

இந்தியா- இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் விளையாடிய இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 93 ரன் வித்தியாசத்திலும் இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 88 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. தொடரை வென்றது குறித்து இந்திய கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

நாங்கள் 7 பேட்ஸ்மேன்களுடன் விளையாடினோம். வாஷிங்டன் சுந்தர் சிறந்த பேட்ஸ்மேன். போட்டி தொடர் ஆரம்பிக்கும்போது 6 பேட்ஸ்மேன்கள், ஒரு ஆல் ரவுண்டருடன் விளையாட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் தொடரில் நாங்கள் விளையாடிய விதம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது அணியின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி என கருதுகிறேன்.

ஒவ்வொரு வீரரும் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள தயாராக உள்ளதை காட்டுகிறது.

நிறைய வீரர்கள் தங்கள் முதல் அல்லது 2-வது போட்டியில் விளையாடினர். ஆனால் அதுபோல் அவர்கள் நினைக்கவில்லை. எந்த ரன் இலக்கையும் இந்திய அணியால் துரத்தி பிடிக்க முடியும்.

தற்போது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை எதிர் நோக்கி இருக்கிறோம். இந்த சுற்றுப்பயணம் வேறு மாதிரியான சவாலாக இருக்கும்.

உள்ளூரிலும் மற்ற அணிகளை வீழ்த்துவது என்பது எளிதானதல்ல. வெவ்வேறு சூழ்நிலையில் நாங்கள் மீண்டு வந்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா ஏற்கனவே டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

Comments
Loading...