தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்க்கரை நோய் – உணவு கட்டுப்பாடு

சர்க்கரை நோய் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது உணவுக் கட்டுப்பாடுதான். ஆனால் உண்மையில் இதை உணவுமுறை மாற்றம் என்று கூறுவதே பொருத்தமானது.

இதுநாள் வரை கணக்கிடாமல் பசித்த போது எதையாவது சாப்பிட்டு வந்த நீங்கள் சர்க்கரை நோய் என்று தெரிந்ததும் அன்றாடம்; சாப்பிடும் உணவு வகைகளையே சற்று மாற்றி, அளவிட்டு, எடைபோட்டு, சரியான நேரத்தில் உண்பது தான் உணவுமுறை மாற்றம். எனவே உணவுக் கட்டுப்பாடு என்று வயிற்றைப் பட்டினி போட்டு வருந்தத் தேவையில்லை.

பொதுவாக எல்லோரும் ஒரே விதமாகச் சாப்பிடுவது இல்லை. கட்டிட வேலை செய்யும் ஒருவரும் கட்டிட பிளான் தயாரிக்கும் இஞ்சினியரும் ஒரே அளவு சாப்பிடலாமா? கூடாது. அவரவர் வேலைக்குத் தகுந்தாற் போல சக்தி தேவைப்படுகிறது. எனவே, செலவிடும் சக்கதிக்கு ஏற்றாற்போலத்தான் சாப்பிட வேண்டும்.

நாள் முழுவதும் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு குறைந்த அளவு உணவே போதுமானது. அவர் அதிக உணவு சாப்பிட்டால் கொழுப்புச்சத்து உடலில் சேர்ந்து விடும் அபாயம் உண்டாகும். அப்புறம் சர்க்கரை நோய் தானாகவே வந்துவிடும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான பொதுவான உணவுக் குறிப்புகள்

• உங்களுக்கென்று தனியாக வீட்டில் சமைக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் தயார் செய்வதையே நீங்களும் அளவோடு பிறருடன் சேர்ந்தே உண்ணலாம். கடும்பத்தியம் தேவை இல்லை.

• நார்சத்து அதிகமுள்ள காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்ப்பதால் சர்க்கரையின் அளவு, கொழுப்புச் சத்தின் அளவு இரண்டையும் குறைக்கச் செய்யலாம்.

• கோதுமையும் ராகியும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அல்ல. அளவுடன் தான் உண்ண வேண்டும். ஏனெனில் அரிசி, கோதுமை, ராகி மூன்றுமே கிட்டதட்ட ஒரே சக்தியை தருபவை.

• உணவு முறையை கடைப்பிடித்தால் மட்டுமே மாத்திரைகளும், இன்சுலின் ஊசியும் சர்க்கரையை குறைக்க உதவும். அதிக உணவு சாப்பிட்டு விட்டு அதிக மாத்திரை சாப்பிடுவது தவறு.

• உணவு மாற்று முறையை அறிந்து கொள்ளுங்கள். அதனால் ஒரே மாதிரியான உணவு சாப்பிடுவதால் ஏற்படும் மனச் சலிப்பை தவிர்க்கலாம்.

• சைவ உணவே சர்க்கரை நோய்க்கு நல்லது. அசைவ உணவு உண்பவர்கள், அது கொடுக்கும் சக்தியைக் கணக்கிட்டு அளவாக உண்ணலாம்.

• கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும். உதாரணமாக : முட்டையில் உள்ள மஞ்சள் கரு, மாட்டிறைச்சி, ஈரல், மூளை, ஆட்டுக்கறி, இறால், நண்டு, முந்திரி, பாதாம்பருப்பு, நிலக்கடலை, ஆட்டுக்கால் சூப்.

நார்ச்சத்துகளின் முக்கியத்துவம்

நார்ச்சத்து என்பது மிக அதிகமாக பச்சைநிற காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், பயிறுகள் மற்றும் சில பழ வகைகளில் கிடைக்கிறது. இது பல வகையான மூலக்கூறுகள் கொண்ட எளிதில் ஜீரணிக்க முடியாத திடமான மாவுச்சத்து ஆகும்.

இதன் முக்கியமான தன்மை என்னவெனில், இதனை அவ்வளவு எளிதாக நமது இரைப்பை ஜீரணிக்க முடியாது. மேலும் இது உணவுப் பொருட்களின் மீது உறைபோல படிந்து சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்துக்களை அவ்வளவு எளிதாக குடல் வழியே உறிஞ்சவிடுவதில்லை.

உணவுகளில் அதிகப்படியான சர்க்கரை, கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்கள், உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் சில இரசாயனப் பொருட்கள், சில நுண்கிருமிகள் போன்றவற்றை நார்ச்சத்து பிடித்து மலத்தில் வெளியேற்றுகிறது.

சர்க்கரை நோயாளிகளின் பின் விளைவுகளான கண் பாதிப்பு, இருதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்புகள் போன்றவற்றையும் வரவிடாமல் நார்ச்சத்து தடுக்கிறது.

உண்ணும் உணவில் உள்ள நார்ச்சத்து தான் இரத்தத்திலிருந்து சர்க்கரை எந்த அளவிற்குக் குறைக்கப்படுகிறது என்பதனைத் தீர்மானிக்கிறது.

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும் உணவு முறையை கடைப்பிடிப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை எளிதில் தசைகளுக்கு சென்று, இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

உணவில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால் அது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் சுரக்கும் அளவையும், இன்சுலின் பயன்படும் அளவையும் முறைப்படுத்தும்.

அதிக நார்ச்சத்து எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் சிறிதளவு இன்சுலின் சுரந்தாலும் அது முழுமையாக பயன்பட ஏதுவாக அமையும். ஏனென்றால் நார்ச்சத்தானது இன்சுலினைப் பயன்படுத்திக் கொள்ளும் ரிஸப்ட்டார்களின் திறனை அதிகப்படுத்துகிறது.

உணவு வகைகளில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால் அதன் சர்க்கரையை மிகைப்படுத்தும் திறன் குறையும். அதே போல் நார்ச்சத்து குறைவாக இருந்தால் சர்க்கரையை மிகைப்படுத்தும் திறன் அதிகமாகும்.

பால் ஒரு முழுமையான உணவு

பாலை ஒரு முழுமையான உணவு என்று கூறுவார்கள். ஏனென்றால் அதில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகிய மூன்றும் உள்ளது. இதைத்தவிர கால்சியம் என்னும் சுண்ணாம்புச்சத்து நம் உடலுக்கு மிகமிக இன்றியமையாத ஒன்றாகும்.

வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வளரும் பருவத்தில் உள்ளவர்களுக்கும் கால்சியம் மிகமிக அவசியம்.
நாம் உண்ணும் உணவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது கால்சியம் சத்தை பாலிலிருந்து தான் நாம் அதிகம் பெறுகிறோம். எகவே தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் பால் சாப்பிடுவதில் தவறில்லை.

ஆனால் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்களும், கொழுப்புச்சத்து மாத்திரை சாப்பிடுபவர்களும் பால் சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.

இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள், இரவில் மாத்திரை சாப்பிடுபவர்கள், இரவில் படுப்பதற்கு முன்பாக ஒரு டம்ளர் பால் சாப்பிடுவதில் எவ்விதமான தவறும் இல்லை.

பாலில் ஊக்க பானங்களை சேர்த்து சாப்பிடுவதை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலை மட்டுமே அருந்த வேண்டும். மாட்டிலிருந்து கறந்த பாலை நேரடியாக அருந்துவது கூடாது.

Comments
Loading...