தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்ச்சையை கிளப்பியுள்ள ஸ்பெக்டர்: சிக்காமல் தப்பிப்பது எப்படி?

சர்ச்சையை கிளப்பும் ஸ்பெக்டர்: சிக்காமல் தப்பிப்பது எப்படி?

கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்பதோடு இவை இல்லாமல் பெரும்பாலான பணிகளை மேற்கொள்வது சிரமமான காரியங்களாகி விட்டது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாதனங்களில் சிப் சார்ந்த பாதுகாப்பு பிழை இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பிழை வாடிக்கையாளர்களின் கடவுச்சொல் மற்றும் மிக முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் திருட வழி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்டர் மற்றும் மெல்ட்டவுன் என அழைக்கப்படும் இரண்டு பிழைகளும் மைக்ரோ பிராசஸர்களின் வடிவமைப்பு கோளாறு ஆகும்.
இவை கம்ப்யூட்டர் மட்டுமின்றி மொபைல் சாதனங்கள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்படுத்தும் சர்வெர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து அமேசான் வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த பிழை அதிநவீன பிராசஸர் வடிவமைப்புகளில் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த பிழை என்றால் என்ன? இவை என்ன செய்யும்? இவற்றால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
 

 
மெல்ட்டவுன் மற்றும் ஸ்பெக்டர் எவ்வாறு இயங்குகின்றன?
மைக்ரோபிராசஸர்களின் வேகத்தை மேம்படுத்த பின்பற்றப்படும் வழிமுறையை ஸ்பெகுலேட்டிவ் எக்சீகியூஷன் என அழைக்கின்றனர். இந்த வழிமுறையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையை அறிந்து கொள்ள 2017-ம் ஆண்டு கூகுள் பிராஜக்ட் சீரோ குழுவினர் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்தனர்.
வழக்கமான சி.பி.யு.க்களுடன் ஒப்பிடும் போது இவை கடினமான பணிகளையும் மிக வேகமாக செய்து முடிக்கும் படி உருவாக்கப்பட்டன. ஸ்பெகுலேட்டிவ் எக்சீகியூஷன் வழிமுறையை பயன்படுத்துவதில் பிராசஸர்கள் மிகப்பெரிய பிழையை இழைக்கின்றன. இந்த பிழை காரணமாக சில பணிகளை பிராசஸர்கள் சரிவர செய்யாது.
இதனால் குறிப்பிட்ட சாதனத்தில் உள்ள தகவல்கள் கசியும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இந்த பிழை ஹேக்கர்களுக்கு வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடும் வசதியை ஏற்படுத்துகிறது என தி வெர்ஜ் எனும் வலைத்தளம் தெரிவித்துள்ளது. இவை பிரவுசர்களில் ஜாவாஸ்க்ரிப்ட் கோட் மூலம் ஹேக்கர்களை திருட வழி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
இதனால் ஏற்படும் பாதிப்பு?
இந்த பிழை காரணமாக விண்டோஸ், மேக் ஓ.எஸ். மற்றும் லினக்ஸ் உள்ளிட்ட இயங்குதளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொல், கீஸ்டிரோக் உள்ளிட்டவை திருடப்படும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும், பிரவுசர்களில் சேமிக்கப்பட்டிருக்கும் கடவுச்சொல் அல்லது பாஸ்வேர்டு மேனேஜர் உள்ளிட்டவற்றில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் உள்ளிட்டவை திருடுபோக வாய்ப்புகள் அதிகம்.
ஆண்டிவைரஸ் பயன்படுத்துவோரும் இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது என தெரியவந்திருக்கிறது. மெல்ட்டவுன் பிழை இன்டெல் மூலம் இயங்கும் கணினிகள், லேப்டாப் மற்றும் மேக்புக் சாதனங்களை பாதிக்கும் நிவையில், ஸ்பெக்டர் பிழை AMD மற்றும் ARM பிராசஸர்களை பயன்படுத்தும் சாதனங்களை பாதிக்கும்.
அந்த வகையில் ஸ்மார்ட்போன்களும் இந்த பாதிப்பில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்ட சாதனங்களும் இந்த பிழையில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிழை கடந்த 20 ஆண்டுகளாக நீடித்திருப்பது தெரியவந்துள்ளது.
 

 
மெல்ட்டவுன் மூலம் உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி?
– பிரவுசர்கள்:
வெப் பிரவுசர்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் நிலையில், இவற்றுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் வழங்குவது அவசியமாகியுள்ளது. அந்த வகையில் மொசில்லா சார்பில் ஃபயர்ஃபாக்ஸ் 57 அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது. கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் தரப்பில் குரோம் மற்றும் எட்ஜ் பிரவுசர்களுக்கு விரைவில் அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– ஆண்ட்ராய்டு:
உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருக்கிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாக்கும் நோக்கில் அப்டேட் வழங்கப்பட வேண்டியது அவசியமாகியிருக்கிறது. இதுகுறித்து கூகுள் வெளயிட்டுள்ள தகவல்களின் படி சந்தையில் பயன்படுத்தப்பட்டு வரும் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இந்த பிழைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
– மைக்ரோசாஃப்ட்:
மெல்ட்டவுன் பிழையை சரி செய்ய பெரும்பாலான நிறுவனங்கள் அப்டேட் வழங்கியுள்ளன. மைக்ரோசாஃப்ட் சார்பில் விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது. விரைவில் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்களுக்கும் அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட்களை இன்ஸ்டால் செய்வதில் சிரமம் ஏற்படும் பட்சத்தில் ஆண்டிவைரஸ் மென்பொருளை செயலிழக்க செய்து மைக்ரோசாஃப்ட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ் அல்லது விண்டோஸல் டிஃபென்டர் சேவையை பயன்படுத்த கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
– ஆப்பிள்:
மேக் கணினிகள் மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்கள் இந்த பிழையால் பாதிக்கப்பட்டிருப்பதை ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஐ.ஓ.எஸ். 11.2, டி.வி. ஓ.எஸ். 11.2 மற்றும் மேக் ஓ.எஸ். 10.13.2 அப்டேட்களின் மூலம் மெல்ட்டவுன் பிழை சரி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெக்டர் பிழையை சரி செய்வதற்கான அப்டேட் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Loading...