தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழீழ தேசியப் பேரியக்கமும் பண்பாட்டுப் பணிகளும் – மு.திருநாவுக்கரசு

ஆறுகள் ஓடட்டும் குப்பைகள் ஒதுங்கட்டும்.
கலை-பண்பாட்டு செயற்பாடுகளை பேராறென பெருக்கெடுக்கச் செய்வதன் வாயிலாக ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுக்க வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் எழுந்துள்ளது.

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கலை-இலக்கிய-பண்பாட்டுச் செயற்பாடுகள் பற்றிய சத்தங்கள் ஆங்காங்கே எழுகின்றன. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கலை-பண்பாட்டு செயற்பாடுகள் என்பனவும் ஓர் அரசியல்தான்.

அதாவது மக்களின் அரசியல் ரீதியான துன்ப துயரங்களை நீக்கம் செய்து விட்டு எதிரிக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் சேவை செய்யும் பணியே அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கலை-இலக்கிய-பண்பாட்டு பணியென்பதாகும்.தெளிவான வார்த்தையில் சொல்வதென்றால் தெரிந்தோ, தெரியாமலோ இத்தகையோர்கள் எதிரியின் கையாட்கள் அல்லது ஒடுக்கப்படும், துன்பப்படும் மக்களின் எதிரிகள். இன்னொரு வகையில் இத்தகையோர் வரலாற்று முன்னேற்றத்திற்கும், மக்களுக்கும் எதிரான தீய சக்திகள். ​​​​​​​​

“Othello”, “Julius Caesar” போன்ற பத்திற்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதியுள்ளார். இவை அனைத்துமே அரசியல் உள்ளடக்கங்களைக் கொண்டவை. குறிப்பாக “ஜுலியஸ் ஸீஸர்” நாடகம் அரசியல் தலைவர்களின் அதிகார ஆசை, சதி, சூழ்ச்சி, இராஜதந்திரம் என்பனவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது.அது எக்காலத்திற்கும் பொருத்தமான மேற்படி அரசியல் உள்ளடக்கத்தை துன்பியல் நாடகமாக வெளிப்படுத்தி நிற்பதன் மூலம் அதற்கென ஓர் அரசியல் அமரத்துவம் உண்டு.

ஷேக்ஸ்பியரின் மேற்படி “ஜுலியஸ் ஸீஸர்” நாடகத்தில் அரசியல் அநீதியை துன்பியல் வடிவில் அனுபவிக்கும் ரசிகர்கள்.தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் அநீதிகளையும், அரசியல் துன்பியல்களையும் ,கலை படைப்புக்களில் அரசியல் நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருவதில் தீய உள்நோக்கம் உண்டு.

“ஜுலியஸ் ஸீஸர்” நாடகத்தில் வரும் அதிகார வேட்கை, அரசியல் சூழ்ச்சி, சதிகார இராஜதந்திரம் என்பனவற்றைவிடவும் மோசமான அரசியல் இராஜதந்திர சதிக்குள் ஈழத் தமிழர்கள் “நல்லாட்சி”, “நல்லிணக்க” அரசாங்கத்தின் கீழ் ஒடுக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

படுகொலைக்கு உள்ளானோர் அவர்களது உறவினர்களின் துயரம், விதவைகளின் துயரம், பெற்றோர் அற்ற பிள்ளைகளின் துயரம், அங்கவீனமுற்றோரின் துயரம், சிறையில் வாடுவோரின் துயரம், தேசிய இன அழிப்பு பற்றிய துயரமென நீளும் துயரங்களை பண்பாட்டுத் தளத்தில் கலை-இலக்கியவாதிகளும், கர்த்தாக்களும் வெளிப்படுத்த வேண்டிய காலமிது.

“அனைத்துமே அரசியலுக்குக் கீழ்பட்டவை” என்ற கோட்பாட்டிற்கு இணங்க கருவறையிலும் அரசியல் உண்டு, புதைகுழியிலும் அரசியல் உண்டு, கழிவறையிலும் அரசியல் உண்டு.

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கலை-பண்பாட்டு செயற்பாடுகளைப் பற்றி பேசுபவர்கள் தமது கழிவறைகளை அரசியல் ஆணைக்குக் கட்டுப்பட்டே அமைக்கிறார்கள் என்பதை உணராதிருப்பது வியப்பிற்குரியது.சட்டிக்குள் மசியும் கீரைக்குள்ளும் அரசியல் உண்டு, கழிக்கும் சிறுநீரிலும் அரசியல் உண்டு. இத்தகைய அரசியலை கலை-பண்பாட்டு செயற்பாடுகளில் நீக்கம் செய்ய வேண்டுமென்று கோருபவர்கள் மக்களின் அரசியல் துயரங்களை கலைப்படைப்பாக படைக்கக் கூடாதென்று எதிரியின் சார்பில் கோருவோராவர்.

18ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவின் மாமன்னனாக விளங்கிய மகா பீற்றர் ரஷ்யாவிற்கு பெரிதும் அவசியப்படுவது பண்பாட்டு சீர்திருத்தம் என்ற கொள்கையை முன்வைத்தார். ஆண்கள் நீண்ட கூந்தல் வளர்த்து பின்னிவிடும் பழக்கத்தை கொண்டிருந்த நிலையில் கடும் சட்டங்களின் மூலம் மேற்படி பின்னல்களை வெட்டுவதிலிருந்து அவர் தன் பண்பாட்டு சீர்திருத்தத்தை ஆரம்பித்தார்.

அதன்படி ஐரோப்பாவில் இடம்பெற்றிருந்த மறுமலர்ச்சி யுக பண்பாட்டையும், சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்டு ரஷ்யாவில் இத்தகைய பண்பாட்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டார். அதன் மூலம் ரஷ்யாவை நவீன பண்பாட்டிற்குரிய ஒரு நாடாக மாற்றியமைத்தார்.அதுவரை பழைமை பேணும் கொடுங்கோல் மன்னராட்சிக் கலாச்சாரத்தைக் கொண்டிருந்த ரஷ்யாவை நவீன பண்பாட்டிற்கு திசை திருப்பியதன் மூலம் இன்றைய ரஷ்யாவின் வளர்ச்சிக்கான தந்தையாக வரலாற்றில் கணிக்கப்படுகிறார்.

இங்கு அவர் மேற்கொண்ட பண்பாட்டு மாற்றம் மற்றும்
சிந்தனை மாற்றம் என்பன அதன் வரலாற்றை நிர்ணயிக்கும் பாதையாக அமைந்தன.இரண்டாம் உலக மகாயுத்தத்தில் சிதைவுண்ட ஐரோப்பா அந்த யுத்த அனுபவங்களிலிருந்து புதிய கலை-இலக்கிய-பண்பாட்டு மாற்றங்களுக்கு தன்னை பெரிதும் உள்ளாக்கியது.அதுவே உலகளாவிய பண்பாட்டிற்கான விழுமியங்களை தமது கலை-இலக்கிய-பண்பாட்டு செயற்பாடுகள் மூலம் உலகம் முழுவதும் பரப்பியது.

இன்றும் மேற்குலக திரைப்படங்கள், இசை மற்றும் நாடகம், நாட்டியம் போன்ற கலைப்படைப்புகளின் ஊற்றாக இரண்டாம் உலக மகாயுத்தத்தின் துயர் நிறைந்த அனுபவங்களே அடிப்படையாக உள்ளன.
உலகின் எப்பகுதியிலாயினும் மனித இனம் தான் விழிப்படைவதற்கும், முன்னேறுவதற்குமான வழிகளை மேற்படி கலை-இலக்கிய-பண்பாட்டு-அறிவியல் செயற்பாடுகளுக்கூடாகத் தேடுகின்றது. 1983 ஆம் ஆண்டுக் கறுப்பு ஜுலையிலிருந்து முள்ளிவாய்க்கால் உட்பட இன்று வரை தமிழர்கள் படும் இன்னல்கள் உலக வரலாற்றின் பக்கங்களில் தனித்துவமான அத்தியாயங்களைக் கொண்டவை.

“எங்கே, எப்போ தர்மம் தேய்ந்து அதர்மம் தலையெடுக்கின்றதோ அங்கே, அப்போ நான் என்னை மாயைக்குள் புகுத்திக்கொள்வேன்” என்று இந்துமத அவதாரக் கோட்பாடு கூறுகிறது.அதாவது பூமியில் அதர்மம் தலையெடுக்கும் போது உயர்நிலையில் இருக்கும் இறைவன் பூமியில் தாழ்ந்த நிலையான பிறப்பை எடுத்து அந்த அதர்மத்தை களைய முற்படுகிறார் என்பதே கீழிறங்குதல் என்ற அவதாரக் கோட்பாட்டின் பொருளாகும்.

இதனை வெறுமனே ஒரு மதக் கோட்பாடாக மட்டும் பார்க்க முடியாது. சமூகத்தில் அதர்மங்கள் தலையெடுக்கும் போது அதனைக் களைய மக்கள் மட்டத்தில் கீழிறங்கி செயற்பட வேண்டும் என்ற உட்பொருளை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்களின் மீது உள்நாட்டு ரீதியாகவும், வெளிநாட்டு ரீதியாகவும் அநீதி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.இவ்வாறு கேட்பாரின்றி ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், தொடர்ந்தும் அநீதிக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

தன் சகோதர தேசிய இனமான ஈழத் தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து இலங்கைத் தீவை நாகரீகமும், செழுமையும் மிக்க ஒரு நாடாக வைத்திருப்பதற்குப் பதிலாக ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்காக அந்நியர்களிடம் கையேந்தி முழு இலங்கைத் தீவையுமே அந்நியர்களின் காலடியில் ஆட்சியாளர்கள் விட்டுள்ளனர்.

எது எவ்வாறாயினும் பெரிதும் பாதிப்பிற்கும், அழிவிற்கும், இனப்படுகொலைக்கும், பண்பாட்டு அழிப்பிற்கும் உள்ளாகும் ஈழத் தமிழினம் விழித்தெழுந்து தன் பண்பாட்டையும், தேசியத் தன்மையையும் பாதுகாப்பதன் வாயிலாக பூமிப் பந்தின் ஒரு மூலையில் மனித குல நீதியை நிலைநாட்டுவதற்கான பாத்திரத்தை வகிக்க வேண்டும்.
இதற்கு கலை-இலக்கிய-பண்பாட்டு செயற்பாடுகள் முதல்நிலையானவை. கூடவே இவற்றிற்கான தெளிவான சிந்தனை மாற்றமும் அவசியமானது.

ஒரு சமூகத்தின் பண்பாடானது கலை-இலக்கியம்-அழகியல்-நுண்கலை-நாடகம் – நாட்டியம் – இசை – திரைப்படம் – குறும்படம் – ஆவணப்படம் – கிரிகைகள் – சடங்குகள் – சம்பிரதாயங்கள் – பண்டிகைகள் – விழாக்கள் – கொண்டாட்டங்கள் – விருந்தோம்பல் – உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறை என்பவைகளுக்கூடாக வெளிப்படுகின்றது.

இவை சார்ந்து இத்துறைகளுக்குரிய கலைஞர்கள், அழகியலாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், அறிஞர்கள், சமூக-சமய அரசியல் தலைவர்கள் என்போர் சமூகப் பொறுப்புணர்வுடனும், காலத்தின் கட்டளைக்குப் பணிந்தும் ,நீதி நியாயத்தை காப்பதன் பொருட்டும் செயற்பட வேண்டும்.

உள்நாட்டு ரீதியிலும், வெளிநாட்டு ரீதியிலும் அனைத்து சக்திகளாலும் அனைத்து கோணங்களிலும் பாதிப்புக்களுக்கும், துன்ப துயரங்களுக்கும் உள்ளாகி தமது ஆக்கத் திறன்களை இழந்து பூமிப்பந்தில் கையேந்திகளாகவும், ஆங்காங்கே அதிகார சப்பாத்துக்களின் அடியில் மிதிபடுவோர்களாகவும் தமிழர்கள் உள்ளனர்.

இதனைப் புரிந்து கொள்ள ஒரு பண்பாட்டு மனம் வேண்டும். ஈழத் தமிழர் வெறுமனே ஒரு சோற்றுப் பிண்டமல்ல. தொன்மையானதும், விலைமதிப்பற்றதுமான பண்பாட்டு விழுமியத்தை ஆத்மாவாகக் கொண்டவர்கள்.கௌரவம், தன்மானம், பண்பாடு, ஆக்கத்திறன் என்பனவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்பும் சூழலும் இல்லையேல் அத்தகைய மனிதனது வாழ்வு அடர்ந்த மிருகங்கள் வாழும் காட்டில் தவிக்கும் அர்ப்ப பிராணிகளுக்கே சமனானது .

ஈழத் தமிழர்களுக்கான நீதியையும், மேன்மையையும், ஆக்கத் திறனையும், மனநின்மதியையும் வழங்கவல்ல வகையில் அதற்கான அரசியல் உரிமைக்காக போராட வேண்டிய நிலையில் ஈழத் தமிழர்கள் உள்ளனர் .
ஈழத் தமிழர் கோரி நிற்கும் உரிமைகள் நியாயமானவை என்பதை எதிரியால் மறுத்துரைக்க முடியாது.
அதேவேளை ஈழத் தமிழர்களை நாடும் சர்வதேச அரசுகள்கூட ஈழத் தமிழர்களின் உரிமைகளை ஒப்புக்கொண்டு அவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்.

அத்தகைய வாக்குறுதிகளின் அடிப்படையில் ஈழத் தமிழர்களிடம் ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கோரினார்கள். மக்களும் அதனை நம்பி ஆதரித்தார்கள். ஆனால் ஆட்சிமாற்றம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.

அவ்வாறு தமிழ் மக்களைக் கோரிய வெளிநாடுகளும் “எரிகின்ற வீட்டில் கொள்ளி பிடுங்குவது போல” தமிழர்களின் ஆதரவைப் பெற்று தமக்கான அரசியல் நலன்களை அடைந்தார்களே தவிர தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யாது “நீலிக் கண்ணீர்” அல்லது “முதலைக் கண்ணீர்” வடிக்கிறார்கள்.அதிகம் அழிவிற்கும், பாதிப்பிற்கும், ஏமாற்றத்திற்கும், துன்ப துயரங்களுக்கும், நிர்க்கதிக்கும் உள்ளாகும் ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்துதான் அதிக வளமான கலை-இலக்கிய-பண்பாட்டு வெளிப்பாடுகள் மேலெழ வேண்டும் என்பது வரலாற்று நியதி.

இந்நிலையில் ஈழத் தமிழர்கள் மத்தியில் இத்தகைய பணிகளை புரிபவர்கள் வரலாற்று நாயகர்களாய் அமைவர்.கறுப்பு ஜுலைக்குப் பின்னிருந்து முள்ளிவாய்க்கால் பேரவலம் உட்பட இன்றுவரையான அரசியல் – இராணுவ – இராஜதந்திர சதிவலைக்குள் அகப்பட்டு தவிக்கும் தமிழ் மக்களின் மீட்சிக்கான பணியை மேற்கொள்ள மேற்படி அனைத்து தரத்தையும் சேர்ந்த படைப்பாற்றலும், ஆக்கத்திறனும், சிந்தனை ஆற்றலும் கொண்ட நீதிமான்கள் முன்னெழ வேண்டும்.

இத்தகையோர்களின் பங்களிப்பினாற்தான் தமிழ்த் தேசிய பேரலையை உருவாக்க முடியும். தமிழ் மக்களின் துயர் துடைப்பதற்கான தமிழ்த் தேசிய பேரியக்கத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும்.கறுப்பு ஜுலையை அண்டி பாரிய அரசியற் சிந்தனை மாற்றத்திற்கான தேவைகள் எழுந்தன. யாழ் பல்கலைக்கழக மறுமலர்ச்சி கழகம் இத்தகைய அறிவியல் விடயத்தில் பெரும் பணியாற்றத் தொடங்கியதுடன், வெள்ள நிவாரணம் மற்றும் சமூகப் பணிகளிலும் இது ஈடுபட்டலாயிற்று.

இதே போல 1984 ஆம் ஆண்டிலிருந்து யாழ் பல்கலைக்கழக கலாச்சார குழு உருவாகி பண்பாட்டுப் பணிகளை முன்னெடுக்கத் தொடங்கியது. திரு. குழந்தை சண்முகலிங்கம் எழுதிய “மண் சுமந்த மேனியர்” என்ற நாடகத்தையும், கலாநிதி உ. சேரன் எழுதிய “எங்கள் மண்ணும் இந்த நாட்களும்” என்ற கவிதா நிகழ்வையும், “மாயமான்” என்ற தெருவெளி நாடகத்தையும், கலாநிதி க.சிதம்பரநாதனின் நெறியாள்கையின் கீழ் கலாச்சாரக் குழு அரங்கேற்றியது.

இக்கலாச்சார குழுவில் பல்வேறு அரசியல் போக்குகளைக் கொண்ட 50க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அந்நியோன்னியமாகவும், வெற்றிகரமாகவும் செயற்பட்டனர்.பல்கலைக் கழக கலாச்சாரக் குழு ஓர் உதாரணத்திற்கு மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. இதைத் தவிர தனிநபர்களினதும், அமைப்புக்களினதும் வரவேற்கத்தக்க பண்பாட்டு பங்களிப்புகள் பல உண்டு. இத்தகைய பண்பாட்டுப் பணிகள் தற்போது புதுவேகத்துடன் பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியமுண்டு.

நாடகத்துறை இன்று அரங்கத்துறையாக பரிணாமம் பெற்று வருகிறது. இத்தகைய நாடகங்கள் அரங்கத்துறை என்பனவற்றிற்கு அப்பால் பண்பாடு சார்ந்த அனைத்து துறைகளையும் கருத்தில் எடுக்க வேண்டும்.திரைப்படத்துறை சார்ந்து நுணுக்கமான அறிவைக் கொண்ட திரைப்பட விமர்சகரான அ.ஜேசுராசா போன்ற மூத்தோரும் பல இளந்தலைமுறையினரும் உண்டு. இங்கு பெயர் குறிப்பிடப்படாதவர்கள் யாரும் முக்கியத்துவம் அற்றவர்கள் என்றில்லை. அவர்கள் அனைவருமே தாமே முன்வந்து பணியாற்ற வேண்டும்.

அரச உதவிகளற்ற ஈழத்தமிழர்கள் மத்தியில் வர்த்தக ரீதியில் பெரிய அளவில் திரைப்படங்கள் எடுப்பது
தமிழகத்தில் “மகுடம்” என்ற தலைப்பில் 80க்கும் மேற்பட்ட தோல்வாத்திய இசை-நடனக் கலைஞர்களைக் கொண்ட இன்னும் பூர்த்தியடைந்திருக்காத ஓர் ஆவணப்படத்தை கடந்த ஆண்டு பார்க்க முடிந்தது. அதில் பல டசின் கணக்கான தோல்வாத்திய கலைஞர்களின் உன்னதமான கலைப்படைப்பு இடம்பெற்றிருந்தது.

ஒருவகையில் இத்தனை பெருந்தொகையான தோல்வாத்தியக் கருவிகள் தமிழரிடம் உண்டென்பதும், அந்த தோல்வாத்திய கருவிகள் கலைஞர்களின் கரங்களில் மொழிபேசுவன போலவும் காணப்பட்டன. இதில் “பறை” அல்லது “தப்பு” என்று சொல்லப்படுகின்ற வாத்தியமே அனைத்து தோல்வாத்திய கருவிகளையும் வழிநடத்திச் சென்றது.

வேலு என்கின்ற கலைஞனின் கைவண்ணத்தில் அந்த பறை பேச்சாற்றல் கொண்டது போல் இசைக்கப்பட்டது.ஈழத்தில் பறை, தவில், உடுக்கு போன்ற பல தோல்வாத்திய கருவிகளையும் அதற்கான கலைஞர்களையும் ஒன்றுதிரட்ட வேண்டும்.
தவில் வித்துவான் காலஞ் சென்ற தட்சிணாமூர்த்தியின் இசை வரலாறு பற்றி திரு.பத்மநாப ஐயரின் பெரும் முயற்சியால் தமிழ்நாட்டைச் சேர்ந்த அம்சன் குமார் என்பவர் ஓர் ஆவணப்படம் தயாரித்திருந்தார். அதனை பார்க்கும் வாய்ப்பு சென்னையில் அவர் வாயிலாக எனக்குக் கிடைத்தது. ஈழத்து கலைஞனின் கலைச்சிறப்பை அதில் காணும்போது மனம் பூரிப்படைந்தது.

இதேபோல “பறை” தோல்வாத்தியக் கருவி ஈழத்தின் வடக்கு-கிழக்குச் சார்ந்த பல பகுதிகளிலும் பல்வேறு மரபுகளுடன் காணப்படுகிறது. இவற்றையெல்லாம் முதன்மைப்படுத்தி ஒரு கூட்டுமொத்த பண்பாடு மற்றும் தேசிய எழுச்சிக்கு வழிவகுக்க வேண்டும்.

கலைஞர்கள் தமக்கிடையே வேறுபட்ட சிந்தனைகளை கொண்டவர்களாக இருக்கலாம். அந்த வேறுபாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒரு பொது போக்கு அதன் வளர்ச்சிக்கு ஊடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
இங்கு குழுவாதங்களைக் கடந்து, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கடந்து ஓர் உன்னதமான தேசிய இனத்தின் நீதியின்பால் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் மேற்படி வகையைச் சார்ந்த அனைத்து சமூக முன்னோடிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் உண்டு.

“உங்களின் புகழ் நாடுகடந்து ஐரோப்பா எங்கும் பரவுகிறது” என்று நெப்போலியனின் விசுவாசி ஒருவர் நெப்போலியனிடம் கூறியபோது “ஆம் உண்மைதான். ஆனால் நான் சிறிது நேரம் செயற்படத் தவறினால் இப்படி புகழும் இதே மக்களே என்மீது கல்லெறிவார்கள்” என்று நெப்போலியன் பதிலளித்தார்.
செயற்படுபவனைப் பின்தொடர்ந்தே வரலாறு நகரும். இந்த விடயத்தில் எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் அப்பால் செயற்படுவோர்களே வரலாற்றின் போக்கை நிர்ணயிப்பார்கள்.

“ஆறுகள் ஓடட்டும், குப்பைகள் ஒதுங்கட்டும்” என் என்பது போல செயற்பாடும் ஆறாய் ஓடும்போது குப்பைகள் ஒதுங்கிப் போவதுமட்டுமல்ல அக்குப்பைகள்கூட ஓடும் ஆற்று வெள்ளத்தால் அரிக்கப்பட்டு உரமாக மாறிவிடும்.
ஓடும் ஆற்று வெள்ளத்தால் அரிக்கப்பட்டு உரமாக மாறிவிடும். ஓடும் ஆற்று வெள்ளத்தால் அரிக்கப்பட்டு உரமாக மாறிவிடும்.

Comments
Loading...