தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் ஈழச் சிற்பி பற்றி ஒரு தமிழ் தேசிய நேசரின் சொற்சிற்பம்! – பொன்னீலன்

ஓவியர் புகழேந்தி அழகிய ஓவியங்களை உருவாக்கி, அவற்றைச் சந்தைப்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கமோ, புகழ் சம்பாதிக்கும் நோக்கமோ கொண்டவர் அல்ல. அவர் ஒரு சமூக விடுதலைச் சிந்தனையாளர். தமிழோடு பிறந்ததால் தமிழும், தமிழ் மக்களும், தமிழ் நாடும் முழு விடுதலை பெற்று பிற உலக நாடுகளுக்கு ஒப்ப மலர்ச்சியும் வளர்ச்சியும் பெற வேண்டும் என்று விரும்பி அதற்காகத் தன் ஓவிய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் ஓவியப் போராளி.

வங்கக் கடலின் உள்ளே ஒரு கண்ணீர்த் துளி போல் மிதக்கும் இலங்கையின் வடக்கும் கிழக்குமாகப் பரவிக் கிடக்கும் ஆதித் தமிழ் மக்களின் விடுதலைக்கும் கேடு சூழ்ந்து, சிங்களப் பேரினவாதிகளால் தமிழர்கள் அடக்கி ஒடுக்கி நசுக்க முயலப்பட்ட சூழலில் அதை எதிர்த்து வீரப் போர் நடத்திய ஈழத் தமிழ் மக்களின் துயரம் நிறைந்த குரல் உதவிக்காக உலகமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்த போது, அந்த எதிரொலியால் இதயம் அதிர்ந்து ஈழத்துக்கு உதவ, தன் ஓவியக் கலையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமென்று உறுதி பூண்டவர் அவர். அவருடைய ஓவியங்கள் எல்லாமே ஈழப் போர் சாட்சிகளாய் அமைந்தன. ஈழ மக்களின் தியாகத்தையும் வீரத்தையும் எழுச்சியையும் வீழ்ச்சியையும் மனித நேய மனங்களில் ஊடுருவும் வண்ணம் காட்சிகளாயின.
இந்த சூழ்நிலையில் 1990 தொடக்கத்தில் ஈழப் போரில் விடுதலைப்புலிகளின் தமிழீழத் தலைவர் வீரமும் விவேகமும் ஈரமும் ஒன்று திரண்டு உருவான பிரபாகரன் தன் புலிப்படை வெற்றி பெற்ற இடங்களில் தமிழீழ அரசை உருவாக்கி ஈழத் தமிழ் நாட்டிற்குரிய அனைத்து அடையாளங்களோடும் அதை நிர்வாகம் செய்யத் தொடங்கினர். போர் புரிவதைத் தவிர வேறு எதுவும் தெரியாதவர் பிரபாகரன் என்ற எதிரிகளின் சொல்லைப் பொய்யாக்கி, ஒரு சிறந்த நிர்வாகியாக ஈழத் தமிழகத்தைக் கட்டமைத்து நிர்வாகம் செய்தார்.

இந்த வெற்றிகரமான ஆட்சி தமிழ் விடுதலை உணர்வு மேலோங்கிய உலகத் தமிழ் மக்களையும் தேசிய இன சிந்தனை உள்ள இதரரையும் மகிழ வைத்தது. தமிழீழத் தலைவர் பிரபாகரனையும், அவருடைய செயல்களையும் மிக இளமைக் காலத்திலிருந்தே ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்த ஓவியர் புகழேந்தி விடுதலை பெற்று வளர்ச்சிப் பாதையில் மலர்ந்து கொண்டிருந்த தமிழீழத் திருநாட்டுக்கு பலமுறை போனார். சாதாரணமானவராக இல்லை. தேர்ந்த ஓவியராக. தமீழத்தின் பல மையங்களில் ஓவியக் கண்காட்சி நடத்தி அந்த மக்களுக்கு இந்த ஓவியங்களின் மூலம் எழுச்சி ஊட்டிய ஒரு மக்கள் கலைஞராக முதல் முறையும் மூன்றாம் முறைக்குப் பிறகும் தனியாகப் போனவர், இரண்டாம் முறை தன் மனைவியோடும் புதல்வர்களோடும் போனார். பெரும்பாலும் தமிழீழத்திற்கு துணைவியாரையும் குழந்தைகளையும் அழைத்துச் சென்ற ஒரே கலைஞர் புகழேந்தியாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இயக்குனர் மகேந்திரன் தன் மகனோடு வந்ததையும் சிற்பி கன்னியப்பன் தன் மகன் சீனிவாசனோடு வந்ததையும் பதிவு செய்கிறார் புகழேந்தி. திரைப்பட இயக்க நுட்பங்களைத் தமிழீழக் கலைஞர்களுக்கு கற்றுக் கொடுப்பது மகேந்திரனின் நோக்கம். தியாகிகளின் சிற்பங்களை உருவாக்குவது கன்னியப்பனின் நோக்கம். அதற்காகப் பெரும் பாடுபட்டார் சிற்பி கன்னியப்பன்.

ஓவியர் புகழேந்தி தான் ஈழத்துக்குச் சென்றது அங்கு தமிழீழத் தலைவர் தம்மை வரவேற்ற முறை, தங்க வைத்த முறை, தனக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்த நெகிழ்ச்சி, எல்லாவற்றையுமே மனநிறைவோடு பதிவு செய்கிறார். தன் துணைவியாரை பிரபாகரன் நடத்திய முறை, தன் குழந்தைகளை அவர் கொஞ்சிய முறை, யாரிடமும் ஒட்டாத தன் இரண்டாவது மகன் இலக்கியன் பிரபாகரனோடு ஒட்டிக்கொண்ட அதிசயம், எல்லாவற்றையும் மனம் கனியக் கனியப் பதிவு செய்திருக்கிறார். இந்த நூலின் அட்டைப் படத்தில் தோழர் பிரபாகரன் தூக்கி வைத்துக் கொஞ்சும் சிறுவன், புகழேந்தியின் இளைய புதல்வன் என்று நூலை வாசித்தபோது அனுமானித்துக் கொண்டேன். புகழேந்தியின் துணைவியார் சாந்தி அவர்கள் புகழேந்திக்கு நிகராக ஈழத்தையும், ஈழ மக்களையும், பிரபாகரனையும் நேசித்த பாங்கு நூலை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழீழத்தில் ஓவியர் புகழேந்திக்கு விருது கொடுக்கப்படுகிறது. அதை வாங்கும் நேரத்தில் துணைவியார் பக்கத்தில் இல்லையே என்று புகழேந்தி ஏங்குகிறார். அது அவருக்கும் அவர் துணைவியாருக்கும் இருக்கும் அபூர்வமான உறவின் உச்சத்தைத் தொட்டுக் காட்டுகிறது. இந்த உறவு தான் அவரையும் அவர் குடும்பத்தினரையும் பிரபாகரனோடும் அவர் இயக்கத்தோடும் இணைக்கின்ற ஆற்றலின் அடிப்படைக் கண்ணி.

தரைப்புலிகள், வான் புலிகள், கடற்புலிகள் ஆகியோர் தமிழீழத்தை எப்படி உருவாக்கிப் பேணினார்கள் என்று புரிய முடிகிறது. தமிழீழ மாணவர்களின் சின்னச் சின்ன தேவைகளை எல்லாம் தலைவர் எப்படி நிறைவேற்றினார் என்பதைப் புகழேந்தி நுட்பமாகச் சொல்கிறார். மணிக்கூடு கட்ட ஆசைப்பட்ட ஒரு மாணவனுக்குத் தான் கட்டியிருந்த மணிக்கூடையே கழற்றிக் கொடுத்தார். எல்லாரும் நல்ல உணவு உண்ண வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் அவர். பெண்கள் வளர்ச்சிக்காக வெற்றி மனை, நிறைமதி இல்லம், மேரி இல்லம், மலர்ச் சோலை, செந்தமிழ் இல்லம், அன்புச் சோலை எனப் பல்வேறு பேணுதல் களங்களை உருவாக்கினார். தமிழீழத்தின் பொருளாதாரத்தை, மருத்துவத்தை, பண்பாட்டைப் பேணுவதற்கான பல அமைப்புகளை உருவாக்கினார். விளையாட்டுகளில் இளைஞர்களை மேம்படுத்த தனிக் கவனம் எடுத்துக் கொண்டார். காலம் அனுமதித்திருந்தால் தமிழர்களின் பரம்பரை விளையாட்டுக்களை மேம்படுத்த அவர் வழி கண்டிருக்கக் கூடும்.
அங்கே இருந்த காவல் துறை இங்குள்ள காவல் துறை போல் இல்லை. அவர்கள் மக்களை நேசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அரசியலும், பண்பாடும், வரலாறும் கற்பிக்கப்பட்டன.
தமிழீழ வைப்பகம் என்னும் அமைப்பு சேமிக்கும் பழக்கத்தையும் வினியோகிக்கும் பழக்கத்தையும் செல்வத்தை மேம்படுத்தும் பழக்கத்தையும் தமிழீழத்தில் வளர்த்தது. பல நூலகங்களும் உருவாக்கப்பட்டன. வாசிக்கும் பழக்கம் மேம்படுத்தப்பட்டது.

அங்கே சிற்பி கன்னியப்பன் ஈழ வீரர்களின் சிற்பங்களை உருவாக்க முயன்றார். உயிர் ஆண் பெண் வீரர்களின் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. இது கடுமையான பணி. ஆயினும், சிறந்த சிற்பியான அவர் அதை சாதித்தார். வீரர்கள் தியாகிகள் இவர்களின் ஓவியங்களை புகழேந்தி உருவாக்கினார்.
இவ்வளவு செய்தும், சர்வதேச உலகம் ஈழத்தை அங்கீகரிக்கவில்லை. சில நாடுகளாவாவது அங்கீகரித்து உதவியிருக்குமானால் தமிழீழம் வேரூன்றி வளர்ந்திருக்கும்.
புகழேந்தியின் “உறங்கா நிறங்கள்” என்னும் ஓவிய நூலை புரட்டிக் கொண்டே பிரபாகரன் சொன்னது, எனக்கு முதன்மையாகப் படுகிறது. “ஐரோப்பிய ஓவிய பாணியில் நம்முடைய போராட்டக் காட்சிகள் வரையப் படவேண்டும். நெப்போலியன் குதிரை மீது அமர்ந்திருக்கும் ஓவியம் போன்று அவை தத்ரூபமாக இருக்க வேண்டும்” என்று அவர் விரும்பினார்.

தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்த்திகைப் பூவும் (காந்தள்), தேசிய மரம் வாகை மரமும், விலங்காகச் சிறுத்தையும், பறவையாகச் செண்பகமும் பிரகடனம் செய்யப்பட்டன.

ஆணிவேர் என்னும் திரைப்படம் எடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டுத் தமிழீழத்தின் நிர்வாகம் கவனமாக மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு, தமிழ் உணர்வாளர்களின் கனவில் பிறந்து, ஈழத்தமிழ் மண்ணில் மொட்டவிழ்ந்த அந்த அற்புதம் 2009 இல் சிங்களப் பேரினவாத அரசால் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப் பட்டது. கிட்டத்தட்ட மூன்று இலட்சம் அப்பாவி மக்கள் முள்ளிவாய்காலில் ஏமாற்றிக் கொல்லப்பட்டார்கள்.
இந்த நூலை ஓவியர் புகழேந்தி தன் தூரிகையால் உயிரில் தொட்டுத் தொட்டு உருவாக்கியிருக்கிறார். அவ்வளவு உணர்சிகளை அதில் கொட்டியிருக்கிறார்.

ஈழத்தில் சாதிக் கொடுமை 1970 களில் கூட மிகப் பயங்கரமாக இருந்தது என்பதை தோழர் டேனியல் அவர்களின் நாவல்களை வாசிக்கும் போது உணர முடிகிறது. மனித நேய மனங்களை நடுங்க வைக்கும் சாதிக் கொடுமைகள் ஈழப் போரில் அழிந்தன என்கிறார் புகழேந்தி. ஈழத்தில் பெண் ஆண் வேறுபாடு ஒழிப்பு, ஈழப் போரால் நிகழ்ந்தது எனவும் சொல்கிறார் அவர். சாதிய ஏற்றத்தாழ்வும் அழிந்ததா ?
ஈழத் தமிழர் துயர் பற்றி பல நூல்கள் வாசித்திருக்கிறேன். கண்ணீர் வடித்திருக்கிறேன். முன்னுரையும் மதிப்புரையும் எழுதியிருக்கிறேன். ஈழத் தமிழ்நாடு என்ற நிஜத்தை வாசித்து வியப்படைய, தலைவர் பிரபாகரனின் பன்முக ஆளுமையை உணர, அவருடைய இறுகிய செயல்பாடுகளுக்கு நடுவே, மென்மையான கலை உணர்ச்சி இருப்பதைக் காண புகழேந்தியின் நூல் வழி காட்டுகிறது.

உலகத்துக்கு ஒரு புதுமையாகத் தோன்றிய புதிய ரஷ்யா கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் வாழ்ந்தது. எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் நிறை என்று பாரதி பாடிய புதிய பாரதம் தன் 70 ஆவது ஆண்டில் பாரதி சொன்ன திசையில் இருந்து தடுமாறி எங்கோ அலையத் தொடங்கியிருக்கிறது. அதுபோல் தான் தமிழீழமும் எனத் தோன்றுகிறது.

முன்னிலும் வலிமையான மாமனிதர்கள் தோன்றத்தான் போகிறார்கள். மாமனிதர்களின் கனவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கத்தான் போகிறார்கள்.
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்.

தர்மம் மறுபடியும் வெல்லும் ….
ஆம் வெல்லும் ….
நிச்சயம் வெல்லும் !

 

 

Comments
Loading...