தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் உறவுகளுக்கு தீர்வு கொடுக்குமா காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பு??

காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை இயக்குமாறு ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகமும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்கிறது இலங்கை அரசாங்கம்.
இதற்கான அலுவலகம் திறக்கப்பட்டே ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இப்பொழுதுதான் இந்த அலுவலகத்திற்கான தலைவரும் உறுப்பினர்களும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக மொஹான் டி அன்ரநொற்றி பீரிஸ், ஜயதீபா புண்ணியமூர்த்தி, சிரியானி நிமால்கா பெர்ணாண்டோ, மிராட் ரஹீம், சோமசிறி கே. லியனகே, கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
மனித உரிமைகள் தொடர்பிலும் காணாமல் ஆக்கப்பட்டோரைப் பற்றியும் அரசாங்கத்துக்கிருக்கும் அக்கறையை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும். இது கூட தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நாவின் 37 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்பின்மைகளையிட்டு ஏற்படுத்தப்படவுள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளது. அதாவது எல்லோருக்கும் ஒரு கண்துடைப்பு.
சிலவேளை இதை அரசாங்கம் மறுக்கலாம். நல்லிணக்கச் செயற்பாட்டின் அடிப்படையில் பொறுப்புக் கூறல், மீள நிகழாமை போன்றவற்றுக்கு அடிப்படையாக இந்த அலுவலகத்தின் பணிகள் அமையும் எனவும் கூறலாம். இந்த அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமித்தபோது அரசாங்கம் விடுத்த அறிக்கையிலும் ஏறக்குறைய இவ்வாறுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இலங்கையில் காணாமல் போன சகலரினதும் நிலைமையை காணாமல் போனோர் அலுவலகம் தீர்மானிப்பதற்கான இலக்கைக் கொண்டிருக்கிறது. நிலைமாற்று கால நீதிப்பொறிமுறையின் முதலாவது ஆதாரமான ஒன்றாக இது விளங்குகிறது” என.
ஆனால், “இது கலப்படமற்ற ஒரு ஏமாற்று வேலை. பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களையும் ஒட்டு மொத்தத்தில் நாட்டு மக்களையும் சர்வதேச நீதியாளர்களையும் ஏமாற்றுகின்ற முயற்சி. இதை நாங்கள் ஏற்றுகொள்ளப்போவதில்லை. இதற்கு எமது வன்மையான கண்டத்தைத் தெரிவிக்கிறோம். உண்மையிலேயே இந்த அலுவலத்தைச் சரியாக இயக்க வேண்டும் என்று அரசாங்கம் கருதியிருந்தால் அதை ஏற்கனவே செய்திருக்க வேண்டும். இப்படி நாங்கள் கடந்த ஒராண்டுக்கும் மேலாக தெருக்களில் நின்று போராட வேண்டியிருந்திருக்காது. அத்துடன், “காணாமல்போனோர் எவரும் எம்மிடமில்லை” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பகிரங்கமாகவே தெரிவித்து விட்டு, இப்பொழுது அதற்கான அலுவலகத்தை அமைப்பது எதற்காக? யாரை ஏமாற்றுவதற்காக?
இந்த அலுவலகத்தை பொது நிலைப்பட்டு அமைக்கவேண்டும் என்றே நாம் அரசாங்கத்தையும் ஐ. நாவையும் கேட்டிருந்தோம். நீதி விசாரணைக்கு வெளிநாட்டு விசாரணையாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். அப்படிச் செய்யப்படவில்லை. இப்பொழுது நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டையோ செல்வாக்கையோ மீறி, பாதிக்கப்பட்டவர்களின் பக்கமாக நின்று, நீதிக்காகச் செயற்படுவார்கள். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கும் என நாம் நம்பவில்லை” என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதைப் பகிரங்கமாகவே காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கட்டமைப்பைச் சேர்ந்த திருமதி லீலாவதி, திருமதி காசிப்பிள்ளை ஜெயவதனி ஆகியோர் ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இவர்களுடைய கூற்றை அல்லது இந்த அபிப்பிராயத்தை நாம் மறுதலிக்க முடியாது. இல்லையென்றால், இந்த அலுவலகத்தை இயக்குவதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் எப்போதோ செய்திருக்கும். இவ்வளவு காலதாமதம் செய்திருக்காது. அதுவும் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவசர அவசரமாக ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழு நியாயமாகச் செயற்படும் என்று நம்ப வைப்பது வேடிக்கையானதே.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தக் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை இயக்குவதற்கு அரசாங்கம் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்ததை அமெரிக்கா பெரிய ஆரவாரத்தோடு பாராட்டியுள்ளது. “நல்லிணக்கச் செயற்பாட்டை நோக்கி அரசாங்கம் செயற்படுகிறது என்ற நம்பிக்கையை இந்தச் செயற்பாடு உறுதிப்படுத்துகிறது” என அமெரிக்கத் தூதர் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்.
இதையிட்டு நாம் சிரிக்கத்தான் முடியும். பாதிக்கப்பட்ட மக்களை முட்டாள்களாக்குகிறார்கள். பலமற்ற மக்களை ஏமாற்றுகிறார்கள். காதில் ஓட்டை வைத்து, அதிலே பூவைச் சொருகுகிறார்கள். அவ்வளவுதான்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தங்கள் கோரிக்கைக்கான பதிலைக் கேட்டுத் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இந்தப் போராட்டத்தை உலகம் நன்றாகவே அறியும். தினமும் யாராவது ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களோ, வெளிநாட்டுப் பிரதிநிதிகளோ, மனித உரிமைச் செயற்பாட்டாளர்களோ, பிற செயற்பாட்டு அமைப்புகளோ வந்து இந்த மக்களைச் சந்தித்துச் செல்கின்றனர்.
ஆனால், அரசாங்கமும் தமிழ் அரசியல் தலைமையும் இந்தப் பிரச்சினையை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதைப்பற்றி ஒரு நண்பர் சொன்னார், “அரசாங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் சரி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் சரி, இந்த வலியைப் பற்றித் தெரியாது. ஏனென்றால், அவர்களில் யாரும் இந்த வலியை உணரக் கூடிய வாழ்க்கையைக் கொண்டவர்களில்லை. அவர்கள் பாதிப்புகளின் வளையத்துக்கு வெளியே பாதுகாப்பான வாழ்க்கையைக் கொண்டது” என. </p>
<p>இதுவும் உண்மையே. நமது தலைவர்கள் எவருக்கும் எந்தப் பாதிப்புமே இல்லை. அதனால் சனங்களின் வலியையும் கண்ணீரையும் அவர்கள் அறியவும் உணரவும் வாய்ப்பில்லை. தலைவர்களுக்கு இருக்க வேண்டிய நுண்ணுணர் கொம்புகளும் இவர்களிடமில்லை. இப்படியான நிலையில் எப்படி மாற்றங்களை, நியாயமான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்?
எனவேதான் நாட்டிற்குத் தேவையான துணிவும் நேர்மையும் அர்ப்பணிப்பும் இல்லாத நிலையில் நடக்கும் ஆட்சியினால் நாடு எரியும் நிலையிலும் எரிந்த காடாகவும் இருக்கிறது. மகத்தான தலைமைகள் நாட்டுக்குக் கிடைத்திருந்தால், இலங்கை இன்று உலகின் முன்னுதாரணமான நாடுகளில் ஒன்றாக – வளர்ச்சியும் அமைதியும் உள்ள நாடாக இருந்திருக்கும்.
“காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் ஒன்றும் சாதாரணமான விசயமில்லை. இது அரசியல் விவகாரம். ஆகவே அரசியல்வாதிகளே இதற்குத் தீர்வு காண வேண்டும்” என்று கூறிக் கடந்து செல்வதற்குச் சிலர் முயற்சிக்கின்றனர்.
“இதுவொரு மனித உரிமைகள் விடயம். எனவே மனித உரிமைகள் அமைப்புகளும் அதன் செயற்பாட்டாளர்களுமே இதைக் கவனிக்க வேணும்” என்று சொல்லித் தப்புவோரும் உள்ளனர்.
“இது எங்கள் வீட்டுப் பிரச்சினை. ஒவ்வொரு குடும்பத்தினதும் பிரச்சினை. மனிதர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை. குறிப்பாக உயிர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை” என்ற புரிதலோடு இதை அணுகுவோர் ரொம்பக் குறைவு.
மட்டுமல்ல, இதை இனரீதியாகச் சுருக்கிப் பார்ப்போரும் உண்டு. 1970, 1989 களில் ஜே.வி.பி போராட்டத்தின்போது காணாமலாக்கப்பட்டோரைப் பற்றிச் சிங்களச் சமூகத்துக்குள் மட்டுமே கொதிப்புகளிருந்தன. தமிழ், முஸ்லிம் பரப்பில் அதை யாருமே பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது தமிழ்ச் சமூகத்தில் இது பெரியதொரு விவகாரமாகியுள்ளது. சிங்களத்தரப்பில் அந்தளவுக்குக் கொதிப்பில்லை. லசந்த விக்கிரமதுங்க போன்ற ஒரு சிலரின் உறவினர்கள் இந்தப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தாலும் அங்கே மெல்லியதொரு கோடாகவே இது உள்ளது.
எப்படியோ இலங்கையில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்ட போராட்டங்களில் ஒன்றாக காணாமலாக்கப்பட்டோருடைய உறவினர்களின் போராட்டமும் சேர்ந்து விட்டது. இந்தப் போராட்டத்தை இவ்வளவுக்கு நீடிக்க விட்டிருக்கவே கூடாது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்பு. அரசாங்கமும் பொறுப்பு. சரியாகச் சொன்னால், இரண்டு தரப்புக்கும் கூட்டுப்பொறுப்புண்டு. ஏனெனில் இந்த அரசாங்கமும் இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்குத் துணை நின்ற கூட்டமைப்பும் ஒன்றுதான். ஆகவே இவற்றுக்குக் கூட்டுப் பொறுப்புண்டு. ஏனைய கட்சிகளும் தப்பி விட முடியாது. அவற்றுக்கும் ஒரு எல்லைவரையில இதில் பொறுப்பும் கடமையும் உண்டு.
ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட இந்த மக்களைப் பல சந்தர்ப்பங்களிலும் அவமதித்திருக்கிறது. சிறந்த உதாரணம், யாழ்ப்பாணத்துக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூன் வந்திருந்தபோது கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் சுமந்திரனும் நடந்து கொண்ட விதம். இறுதியில் அந்த மக்களைச்சந்திக்காமல் பின் கதவு வழியாகச் சம்மந்தன் தப்பிச் சென்ற சம்பவம். அது மிகவும் அநாகரிகமானது. அதற்கு ஒரு போதுமே யாரும் மன்னிப்புக் கூடக் கேட்கவில்லை.
அரசாங்கத்தரப்பிலும் இவ்வாறே இந்த மக்களுடைய கண்ணீர் அவமதிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்தப் பொறுப்பும் இல்லாமல், “காணாமல் போனவர்கள் என்று யாருமே இல்லை. வேண்டுமானால், அப்படியான முறைப்பாடுகளுக்கு மரணச்சான்றிதழ்” கொடுக்கலாம் என்றார்.இதைப்போலவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தப் பிரச்சினைக்குத் தன்னால் எதையும் செய்வதற்கில்லை என்று கைகளை விரித்தார்.
எனவேதான் இலங்கை அரசாங்கத்தைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புவதில்லை. யார் ஆட்சியிலிருந்தாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் மனப்பதிவு அநேகமாக ஒரே மாதிரியே இருக்கும். சில சந்தர்ப்பங்களில் தமிழர்களின் ஆதரவோடு ஆட்சி நடந்தாலும் அரசாங்கத்தில் தமிழர்களுக்கு நம்பிக்கை இருப்பதில்லை. தற்போதைய நல்லாட்சி தமிழர்களின் ஆதரவோடு கொண்டு வரப்பட்டது. இதைப்போல 1965 டட்லி அரசாங்கத்துக்கும் தமிழர்கள் ஆதரவளித்திருந்தனர். ஆனாலும் தமிழர்களுடைய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை. தமிழ்க்குரல்கள் செவிகொள்ளப்படவும் இல்லை. இதனால் அவர்கள் எப்போதும் எதிர் மனநிலையில்தான் அரசை அணுகுவதுண்டு.
இந்த மனப்பதிவே மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க (ஸ்ரீ. சு.க – ஐ.தே.க) அரசாங்கமும் தமிழர்களுக்கு விரோதமானது என்ற கருத வைத்துள்ளது.
நடைமுறைக் காரணங்களையும் வரலாற்று அனுபவங்களையும் தமிழ்ச் சமூகத்தின் மனதில் வேறாக்கிக் காட்ட வேண்டும் இலங்கை அரசு.
அது சரி, காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் என்னதான் செய்யப்போகிறது?

Comments
Loading...