தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தமிழீழ பெண்கள் எழுச்சி தினம் அனுஸ்டிப்பு!

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளான இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் தளபதிகளில் ஒருவரான 2ஆம் லெப்ரினன்ட் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது.1

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு அலுவலக வளாகத்தில் இந்த நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கைவேலி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த எம்.பி.ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், 2 ஆம் லெப்ரினன்ட் மாலதியின் திருவுருவப்படத்திற்கான பொதுச்சுடரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் தி.கிந்துஜன் ஏற்றிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து கேப்பாபுலவு – முள்ளிவாய்க்கால் கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சுடரேற்றினர்.

தொடர்ந்து கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதியான சிறிறஞ்சினி மலர்மாலை அணிவித்த நிலையில் அகவணக்கமும் மலரஞ்சலியும் இடம்பெற்றன.

இதனையடுத்து அங்கு அஞ்சலி உரை நிகழ்த்திய கைவேலி பெண்கள் அமைப்பின் உறுப்பினர் எம்.பி.ராஜேஸ்வரி, தற்போது தாம் பெண்களாக தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், அரசியலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அதிகரிக்கவும் வித்திட்டது தமீழீழ பெண்களின் எழுச்சி நாள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சிறப்புரையை கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதியும் அறநெறி ஆசிரியையுமான மல்லிகா நிகழ்த்தினார்.

இதில் தமிழ்த் தேசியத்தில் பெண்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதனை எமது முன்னாள் போராளிகள் எடுத்துக்காட்டியுள்ளனர் என தெரிவித்தார்.

Comments
Loading...