தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசிய ஓபன் தடகளம்: 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் லட்சுமணன், சூர்யாதங்கம் வென்றனர்

சென்னையில் நேற்று தொடங்கிய தேசிய ஓபன் தடகள போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர் லட்சுமணன், வீராங்கனை சூர்யா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
சென்னை:

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 950 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தொடக்க விழாவில் ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி துறை முதன்மை தலைமை கமிஷனர் சி.பி.ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரீதா ஹாரிஷ் தாக்கர், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு, முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை ஷைனி வில்சன், அரைஸ் ஸ்டீல் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாடு தடகள சங்க பொருளாளர் சி.லதா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சர்வீசஸ் வீரர் லட்சுமணன் 14 நிமிடம் 04.21 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ரெயில்வே வீரர் அபிஷேக் பால் (14:08.38 வினாடி) வெள்ளிப்பதக்கமும், சர்வீசஸ் வீரர் மான்சிங் (14:08.87 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ரெயில்வே வீராங்கனை எல்.சூர்யா 16 நிமிடம் 02.85 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கமும், மற்றொரு ரெயில்வே வீராங்கனையான சிந்தா யாதவ் (16:40.45 வினாடி) வெள்ளிப்பதக்கமும், அகில இந்திய போலீஸ் வீராங்கனை சாய்கீதா நாய்க் (16:53.97வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர். லட்சுமணன், சூர்யா ஆகிய இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஆண்களுக்கான குண்டு எறிதலில் சர்வீசஸ் வீரர் தேஜிந்தர் பால் 18.86 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கமும், ஓ.என்.ஜி.சி. வீரர் ஓம்பிரகாஷ் சிங் (18.80 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், ரெயில்வே வீரர் ஜஸ்தீப்சிங் (18.51 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள்.

பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் ரெயில்வே வீராங்கனைகள் சரிதாசிங் (60.55 மீட்டர்), குன்ஜன்சிங் (59.10 மீட்டர்) முறையே தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும், அரியானா வீராங்கனை ஜோதி (57.07 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற ரெயில்வே வீராங்கனை நீவா தாண்டிய காட்சி

நீளம் தாண்டுதலில் ரெயில்வே வீராங்கனை நீவா (6.35 மீட்டர்) தங்கப்பதக்கமும், ஜார்கண்ட் வீராங்கனை பிரியங்கா (6.22 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், கர்நாடகா வீராங்கனை ஐஸ்வர்யா (6.16 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள்.

Loading...