தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பட்டப்பகலில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – யாழ் குப்பிளானில் சம்பவம்..

யாழ்.குப்பிளான் வடக்கு வீரபத்திரர் ஆலயத்திற்கு அண்மையில் நேற்றையதினம்  பட்டப்பகல் வேளையில் வாள்வெட்டுக் கும்பல் வீடு புகுந்து  அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

தமது முகங்களைக் கறுப்புத் துணிகளால் மறைத்துக் கொண்டு நான்கு மோட்டார்ச் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கைக்கோடரிகளுடன்   எட்டுப் பேர்  அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்த  மேசை, கட்டில் என்பவற்றைப் பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய  வாள்வெட்டுக் கும்பல் வீட்டிலிருந்த தொலைக்காட்சி உட்படப் பல்வேறு பெறுமதியான பொருட்களையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் வீட்டிலுள்ள முன்பக்கக் கண்ணாடி யன்னல்களையும்,பக்கக் கண்ணாடி யன்னல்களையும் அடித்து நொறுக்கிய அவர்கள்  வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களிற்கும்  தீ வைத்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டிற்கு வெளியே நின்றிருந்த இளைஞனைத் துரத்திச் சென்று  வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்த முற்பட்ட போதிலும் இளைஞன் தெய்வாதீனமாகத் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்கச் சங்கிலியையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாள்வெட்டுக் கும்பல் வெளியிடத்திலிருந்து வந்து குப்பிளான் தெற்கில் அமைந்துள்ள சுடலையொன்றுக்குள் தம்மைத் தயார்படுத்திக் கொண்டு வந்துள்ளதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவதானித்துள்ளதாகவும்ம் கூறப்பட்டுள்ளது.

அவர்கள்  குப்பிளான் பகுதியிலுள்ள வீதிகளால் பயணித்த போது வீதியால் சென்ற மக்களையும் ,தனியார் கல்வி நிலையத்தில் நின்றிருந்த மாணவர்களையும்  வாள்களைக் காட்டிக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.

அவர்கள் சென்ற  சில நிமிடங்களுக்குள் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதேவேளை  வாள்வெட்டுக் கும்பல் குப்பிளான் சந்தியால் பயணம் செய்தமைக்கான சி.சி.ரி.விக் காணொளி ஆதாரங்கள் சிக்கியுள்ள நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது வீட்டின் குடும்பத்தலைவர்களான கணவனும், மனைவியும் வெளியே சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த சில நாட்களாக குப்பிளானில்  திருடர்கள் தமது கைவரிசையினை காட்டி வரும் நிலையில்   இதுதொடர்பில் பலரும் தமது கடும் கண்டனங்களை  வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

 

Comments
Loading...