பிரபாகரம் என்றால் என்ன?

தமிழர் மனங்களில் பாசமுள்ள பற்றுள்ள தலைமையாக பதிந்துவிட்ட பிரபாகரன் என்ற நாமத்தை அதன் சூத்திரத்தை இன்றைய தமிழ் தலைமைகளோ அல்லது செயற்பாட்டாளர்களோ அது ஈழம் மட்டுமல்ல ஈழம் கடந்தும் இன்றுவரை சரிவர புரிந்து கொண்டதாக தெரியவில்லை. இது குறித்து விரிவாக பல பரிணாமங்களில் பல விடயங்களை விரைவில் எழுதுகிறேன். ஆனால் இன்று ஒரு விடயம்…


பிரபாகரன் பேசும் தலைவர் அல்ல…. முழங்கும் தலைவர் அல்ல… சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆழமான அர்த்தத்தை தேடுபவர்… தன் மக்களிற்கு என்றும் உண்மையாக இருந்தவர்… உரிமை வேண்டி நிற்கும் மக்களின் விடுதலை வரலாறுகளின் இதயநாயகனாக பார்க்கப்படும் சே எனப்படும் சேகுவாராவிடம் தலைமை என்றால் என்ன என்று கேட்டபோது அவர் சொன்னார்… முதலில் உங்கள் மக்களிற்கு என்ன தேவை என்பது தெரிந்திருக்கவேண்டும்… இரண்டாவதாக அதை அடைவதற்கான மார்க்கம் தெரிந்திருக்கவேண்டும்… இறுதியாக அதை அடைவதற்கான முழுமையான அர்ப்பணிப்பு இருந்தாக வேண்டும்… என்றார்.

இன்று இவை மூன்றையும் கொண்டிருக்கும் ஒரு தலைமையை ஈழத்திலோ ஈழத்திற்கு வெளியிலோ முடிந்தால் அடையாளம் காட்டுங்கள்… இந்நிலையை எட்டுவதற்கு பல்பரிமாண ஆளுமை இருந்தாக வேண்டும்…. இன்றும் பிரபாகரன் என்ற தலமையை தமக்கு பிடித்த ஒரு பரிமாணத்திலேயே அறிந்து புரிந்து பலர் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவரின் பல்பரிமாண ஆளுமையையும் அதுவே அவரை ஒரு உயரிய நிலைக்கு இட்டுச் சென்றது என்பதையும் முழுமையாக புரிந்து கொண்டவர்களாக இல்லை. பிரபாகரன் தன்னை சுற்றியிருந்தவர்களிடமும் இவ்வாறான பல்பரிமாண ஆளுமையை வளர்த்துக் கொண்டே இருந்தார். அதை புரிந்து கொண்டு தம்மை அவ்வாறு வளர்த்துக் கொண்ட பலர் ஈழ விடுதலை வரலாற்றில் தாமும் சாதனையாளர்களானார்கள்… கூடவே அர்ப்பணிப்பின் உயர் வடிவமாகி மாவீரர்களுமாகினர்… அது குறித்து விரிவாக பின்னர் பார்ப்போம்….

சே சொன்ன மூன்று விடயங்களை கொண்டிருந்தால் மட்டும் போதாது… எந்த மக்களுக்காக களம் கண்டீர்களோ அந்த மக்களின் மனங்களை வென்றவர்களாக அந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி உங்கள் பின்னால் அணிவகுக்க எப்போது உங்களால் முடிகிறதோ அப்போதே மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு தேசிய போராட்டத்தில் மக்கள் பலத்துடன் உங்களால் முன்னேற முடியும். இதில் முதலில் உங்கள் மக்களின் பலம் பலவீனம் குறித்த முழுமையான புரிதல் உங்களுக்கு இருந்தாக வேண்டும்… இது ஈழத்தில் இருந்து தமிழகத்தில் சற்று மாறுபடலாம்… மலேசியாவில் இன்னும் வேறுபடலாம்… இவ்வேளை காலத்திற்கு காலமும்… போராட்ட களங்களிற்கு ஏற்பவும் கூட இது மாறுபடலாம் அல்லது வேறுபடலாம்… சுருங்கக்கூறின் இதற்கென்று ஒன்றும் நிரந்தர போமிலா கிடையாது… இங்கு தான் தலைமைகளின் ஆளுமை வெளிப்படுகிறது… அதனால் தான் பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறந்த தலைமை என்கிறோம்…

ஈழத்தமிழினத்தில் உள்ள முக்கிய பலவீனம் நம்பிக்கையை இலகுவாக தொலைத்துவிடுவது… இந்த நம்பிக்கையை கட்டியெழுப்புவதை பிரபாகரன் வெற்றிகரமாக கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக ஏறுநிலை படிமாணத்தில் செய்தார். இதை முள்ளிவாய்க்காலுக்கு பின்னராக கடந்த எட்டு ஆண்டுகளில் யாரும் செய்யதாக தெரியவில்லை… முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான காலம் என்பது மக்கள் நம்பிக்கையை மீண்டும் தொலைத்துவிட்ட காலம்… சிறதுசிறிதாக என்றாலும் மக்களிற்கு வெற்றியை காட்டுங்கள்… இல்லையேல் விரைவில் இந்த மக்களை இழந்து விடுவீர்கள் என தாயகத்தில் இருந்து புலம்வரை நானும் அனைவரிடமும் கதறிப்பாத்துவிட்டேன்… பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்… பந்தா தலைமைகள் மக்கள் தலமைகளாக முடியுமா?
இதற்கான ஒரு உதாரணத்தை என் பதிவுகளில் இருந்தே எடுத்து வருகின்றேன்… நானும் பல பதிவுகளை இட்டு வருகின்றேன்… சமீபத்தில் அமெரிக்க கோப்பைகளை வென்றது கனடிய தமிழர் இளையோர் உதைபந்தாட்ட அணி என்றொரு செய்தியை தரவேற்றியிருந்தேன்… அதற்கு காட்டிய ஆதரவு வெளிப்பாடும் பகிர்வுமே இதற்கான பதில்… அவர்களின் சாதிப்பு உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது…. உங்களின் வெற்றி போன்ற உணர்வை ஏற்படுத்தியது… இளையோர் சாதிப்பார்கள் என்றொரு சிறு நம்பிக்கையையாவது ஏற்படுத்தியது… இவ்வாறு நல்ல செய்திகள் தொடர்ச்சியாக வருமானால் இனத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை உங்களிடம் தானாகவே அதிகரிக்கும் அல்லவா?

இவ்வாறான நல்ல செய்திகள் அரசியல் சார்ந்தோ பொருண்மியம் சார்ந்தோ சமூகம் சார்ந்தோ விளையாட்டு சார்ந்தோ கலை சார்ந்தோ அல்லது இன்னும் ஏதோ துறைசார்ந்தோ அமையலாம்… இரண்டாவது இவ்வாறு அமையும் செய்திகள் உடனுக்கு உடன் அம்மக்கள் குழுமத்திடமும் உரிய முறையில் பகிரப்படல் வேண்டும்… அதாவது இதை ஆங்கிலத்தில் சொல்வதானால மாக்கட்டிங்… இங்கும் தமிழ் இனத்தில் பாரிய குறைபாடு… போராட்ட காலத்தில் கூட இவ்விடயத்தில் புலம்பெயர் தமிழர் தரப்பு தன்னை முழுமையாக வளர்த்துக் கொள்ளவில்லை… குறிப்பாக தமிழர் கடந்த பரப்புரையில்…

ஆகவே பிரபாகரம் குறித்த சரியாக புரிதல் இருந்தால் சின்ன சின்ன வெற்றிகளை நோக்கியாவது வேலைத்திட்டங்களை உருவாக்குங்கள்… அவ்வெற்றிகளை உங்கள் மக்களிடம் உடன் உரியமுறையில் பகிர்ந்து அவர்கள் இழந்துவிட்ட நம்பிக்கையை கட்டியெழுப்பப்பாருங்கள்… அண்ணை வருவார் என்று பாட்டு போட்டுகொண்டிருப்பதை விடுத்து… ஒரு தலைவன் காட்டிய வழியில் சாதித்து இம்மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கப்பாருங்கள்…. அது தான் அவர் படைத்த உயரிய வீரவரலாற்றின் தொடர்ச்சியாகும்….

-Nehru Gunaratnam-

You might also like More from author

Loading...