தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி 180நாளுக்கு மேலாக கனகர் கிராம தமிழ் மக்கள் போராட்டம்

நாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த காணியை கோருகின்றோமே தவிர மாற்றான் காணியை அல்ல என 180 நாட்களுக்கும் மேலாக காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொத்துவில், கனகர் கிராம தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை குறித்த மக்கள் மனித அபிவிருத்தி தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்திடம் நேற்றைய தினம் முன்வைத்துள்ளனர். மனித அபிவிருத்தி தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த், உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியால், கள உத்தியோகத்தர்களான எஸ்.தர்சிகா, எஸ்.மனோரஞ்சினி, வி.ஜனார்த்தனன் ஆகியோர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

சமகால நிலவரம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஸ்ரீகாந்த் மேலும் தெரிவிக்கையில், 180 நாட்களை தாண்டி இந்த மக்களின் நியாயமான போராட்டம் தொடர்வது கவலைக்குரியது. எனினும் பொத்துவில் பிரதேச செயலாளர் அதற்கான நடவடிக்கையை நிதானமாக எடுத்து கொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். எனினும் இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிக்கை செய்யவிருக்கிறோம்.

அந்த மக்கள் காலகாலமாக வாழ்ந்து வந்த நிலத்தை மீள ஒப்படைப்பதில் இத்தனை தாமதம் காட்டப்பட்டு வருவதையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று, பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் ஊறணி எனும் இடத்தில் கனகர் கிராம தமிழ் மக்களின் காணி மீட்பு போராட்டம் தொடங்கி நேற்றுடன் 180 ஆவது நாளாகின்றமை குறிப்பிடத்தக்கது. இற்றைக்கு 58 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து வந்த தமது காணியை கோரி அந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments
Loading...