தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேசாலை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி மற்றும் சாரதி மீது தாக்குதல்…

மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி சாரதி மீது நேற்று வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்கான  சாரதி காயமடைந்துள்ள நிலையில் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பி மேலும் தெரிய வருகையில்,

பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயளர் ஒருவர் நேற்று  இரவு அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு நோயாளரை அனுமதித்த பின்னர் அம்புலன்ஸ் வண்டி மீண்டும் பேசாலை பிரதேச வைத்தியசாலை நோக்கி சென்றுள்ளது.

இதன்போது எருக்கலம் பிட்டி பகுதியில்  முச்சக்கர வண்டியில்  பயணித்த  மூவர் பேசாலை பொது மயானத்திற்கு முன் அம்பியூலன்ஸ் வண்டியை இடை மறித்து சாரதியை தாக்க முயன்றுள்ளனர்.

எனினும் சாரதியும்,சக பணியாளர்களும் உடனடியாக   வண்டியை பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் பேசாலை வைத்தியசாலையின் வாசலில்  வண்டியை இடை மறித்த குறித்த நபர்கள்  சாரதியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

அதோடு   வண்டியின் கண்ணாடியும் அவர்களால்  உடைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து  வைத்தியசாலை நிர்வாகம் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு  தகவலளித்த நிலையில்,   பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை   மேற்கொண்ட பொலிஸார்,  குறித்த மூன்று நபர்களையும் கைது செய்தனர்.

இதேவேளை  அம்புலன்ஸ் வண்டி சாரதி தாக்கப்பட்டமை மற்றும் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமையினை கண்டித்தும்,

குறித்த நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரி பேசாலை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...