தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போராட்டமே நியாயமான தீர்வைப் பெற்றுத்தரும்!

ஆயுதப் போராட்டமோ, அமைதிப் போராட்டமோ… எதிலும் தமிழர்களின் தனித்துவத்தை உலகில் யாரும் விஞ்சமுடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எந்த நாட்டின் உதவியும் இன்றி, வான்படை கொண்டு போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தின் குறியீடு. உலகிலே அகிம்சைப் போராட்டத்தின் குறியீடாகத் தியாகி திலீபன் அண்ணா நிலைத்து நிற்கிறார். மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் குறியீடாகப் புலம்பெயர் தமிழ்மக்கள் முன்னெடுக்கும் உரிமைப் போராட்டங்களும் கேப்பாப் புலவு போன்ற தாயக மக்களின் நிலமீட்புப் போராட்டங்களையும் பதிவுசெய்ய முடியும்.

தமிழர்களுடைய இந்தப் போராட்ட வடிவங்கள் உலகிற்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன.

ஆயுதப் போராட்டம் மௌனித்த 2009 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஒன்பது ஆண்டுகள் கடந்தாலும் தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் இன்னும் எழுச்சிபெற்றுத் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

ஒன்பது ஆண்டுகளாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற ”மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்” சர்வதேசத்தின் மனச் சாட்சியை உலுப்பிய வண்ணமே உள்ளது. புலம்பெயர் மக்கள் முன்னெடுக்கின்ற இந்தப் போராட்டங்கள் உண்மையிலே சிறிலங்கா அரசுக்குப் பாரிய நெருக்கடியைக் கொடுத்தவண்ணமே உள்ளது.

தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தைப் ”பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தி, உலக நாடுகளின் ஆதரவைத் தன்னகப்படுத்திக்கொண்டு, இன அழிப்புச் செய்துவந்த சிங்களப் பயங்கரவாத அரசு, புலம்பெயர் தமிழ் மக்களுடைய தமிழீழத்துக்கான உரிமைப் போராட்டங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் திணறுவதைப் பார்க்க முடிகிறது.

சிங்கள அரச பயங்கரவாதத்தைப் பன்னாட்டு அரங்கில் வெட்கித் தலைகுனிய வைத்தது புலம்பெயர் தமிழர்களுடைய போராட்டம். சிறிலங்கா அரசின் நல்லாட்சி வேடத்தை கலைத்தது தமிழர்களுடைய போராட்டம். சிறிலங்கா ஓர் இன அழிப்பு அரசு என்பதை பன்னாடுகளுக்கு வெட்டை வெளிச்சமாகக் காட்டியது இந்தப் போராட்டங்கள். இவற்றின் பலனாகவே, சிறிலங்கா அரசுக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது.

இந்தப் போராட்டங்களில் ஒரு படி மேலே சென்று, சிறிலங்காப் படைகளின் போர்க் குற்றவாளிகளுக்கு எதிராகத் தமிழ்மக்கள் வழக்குத் தாக்கல் செய்துவருகிறார்கள். போர்க் குற்றவாளிகளான சிறிலங்காப் படை அதிகாரிகள், புலம்பெயர் நாடுகளுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்படுத்தப் படுகிறது.

இது, ஈழத் தமிழர்களுடைய தனித்துவமான போராட்டங்களுக்குக் கிடைத்த பெரிய இராசதந்திர வெற்றியாகவே பார்க்க முடிகிறது.

முத்துக்குமாரில் இருந்து முருகதாசு, செந்தில்குமரன் வரையான உயிர்த் தியாகப் போராட்டங்கள் ஐக்கிய நாடுகள் மன்றத்தையே கதிகலங்க வைத்தது. இப்பேர்ப்பட்ட தமிழர்களுடைய போராட்டங்கள் உலகில் ஈடிணையற்றவை!

தமிழர்களுக்கு இராசதந்திர வெற்றிகளை ஈட்டித்தருகின்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது உலகத் தமிழரின் தலையாய கடமையாக உள்ளது.”தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கான சரியான தீர்வைப் பெறமுடியும்,” என்ற செய்தியை உரத்துக் கூறிவர வேண்டும்.

புரட்சி என்றும் தோற்றதில்லை! வெல்லும்வரை போராடுவோம்! போராட்டமே வாழ்வாய்ப் போன தமிழ்மக்களுக்கு “போராட்டம்” ஒன்றே உரிய தீர்வைப் பெற்றுத்தரும்.

நன்றி.
– த.ஞா.கதிர்ச்செல்வன்.

Comments
Loading...