தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மரண தண்டனையை அமுல்படுத்தினால் இலங்கைக்கு பாதிப்பு: எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையை அமுல்படுத்தினால், நாட்டுக்குக் கிடைத்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “இன்னும் இரண்டு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். எனினும், இதனால் நாட்டுக்குக் கிடைத்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

சிறிது காலம் நீக்கப்பட்டு மீண்டும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு உறுதுணையாக பல்வேறு பிரயத்தனங்களின் பின்னர் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப் பெற்றுள்ளது. எனினும், இந்த விசேட சலுகை ஜனாதிபதியின் மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்தினால் இழக்கச் செய்யப்படலாம்.” என்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் மீண்டும் அந்த சலுகை இலங்கைக்கு கிடைக்கப் பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments
Loading...