தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் நடப்பது உண்மையே- மகாவலி எதிர்ப்பு தமிழர் மறவுரிமை பேரவை..

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் நடப்பது உண்மையே என மகாவலி எதிர்ப்பு தமிழர் மறவுரிமை பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது

 முள்ளிவாய்க்கால் வரலாற்றுத்தளத்தில் தமிழர்கெதிரான அடக்குமுறை வெவ்வேறு வடிவங்களை எடுத்துள்ளது அதில் தமிழர் நில அபகரிப்பு முதன்மையானது.

மகாவலி அதிகாரசபை; தொல்லியல் திணைக்களம் வன பாதுகாப்புத் திணைக்களம்வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்புப் படையினர் என பல்பரிமாண நில அபகரிப்புக்கெதிராக தமிழினம் முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.

இவ் அடக்குமுறைகளுக்கெதிராக நெருக்கடிகளைக் கையாள தமிழ் மக்கள் பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. சனநாயக ரீதியான வன்முறையற்ற போராட்ட வடிவங்கள் தமிழருக்குப் புதியதும் அல்ல.

அவ்வகையில் கடந்த 28ம் திகதி 2018 அன்று மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை மக்களையும் வெகுசன அமைப்புக்களையும் அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மகாவலி திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஒழுங்கமைத்திருந்தது. அப்பேரணிக்கு சகல விதத்திலும் பங்களிப்புச் செய்த பொது மக்கள் வெகுசன அமைப்புக்கள் அரசியல் கட்சிகளுக்கு; பேரவை நன்றி தெரிவித்துக்கொள்கின்றது.

மறுப்புவாதத்தை (Denialism) வரலாற்றில் ஓர் உத்தியாக சிங்கள அரசு பயன்படுத்தி வந்துள்ளது பயன்படுத்தி வருகின்றது. தமிழர் மீது காலங்காலமாக கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளையும் அடக்குமுறையையும் மறைத்து தன்னை ஒரு நிரபராதியாக உலகுக்கு காட்ட முனைந்து வந்துள்ளது.

அதே போல் மகாவலி L வலய முன்னெடுப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை பௌத்த சிங்கள மயப்படுத்துவதை நிராகரித்து மக்கள் சனநாயக போராட்ட முனைப்புக்களுக்கு சேறு பூச முனைந்து வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தை பௌத்த சிங்கள மயப்படுத்துவதான சாட்சியங்கள் பொது வெளியில் இருக்கின்றன.

இதற்கு உதாரணமாக செம்மலை தமிழ்க் கிராமத்தில் நீராவிப் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தை தற்போது பௌத்த தொன்மை அடையாளங்கள் இருப்பதாக கூறி பௌத்த விகாரை அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனூடாக ஏற்கனவே சிங்கள குடியேற்றம் இருந்தது என வரலாற்றைப் புனைந்து இன்னொரு சிங்கள குடியேற்றத்திற்கு திட்டமிடுகின்றது. தமிழர் பாரம்பரிய கிராமமாகிய கருநாட்டுக்கேணியில் அத்துமீறி காணிகளை கைப்பற்றியவர்களுக்கு மகாவலி அதிகாரசபையினால் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கையானது தமிழ் அரச அதிகாரிகளால் சட்டம் சார்ந்து எடுத்த நீதிமன்ற தீர்ப்புக்களை கேலிக்குரியதாக்கியுள்ளதோடு ‘நல்லாட்சி அரசின்’ இரட்டை வேடத்தையும் வெளிக்காட்டியுள்ளது.

 மகாவலி அதிகார சபை 1980 களின் நிறுவப்பட்ட பின்னர் தமிழர் நிலங்களில் நிகழ்ந்த குடிப்பரம்பல் மாற்றத்தினூடு அதன் இனவழிப்பு அரசியலை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். வெலி ஓயா சிங்கள கிராமம் இன்று முல்லைத்தீவின் ஒரு பகுதியாகிவிட்டத்து.

செப்டெம்பர் 5 ம் திகதி 2018 அன்று தமிழர் வரலாற்றுப். பாரம்பரிய நிலமான குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்க முற்பட்ட சம்பவம் நல்லாட்சி அரசு முந்தைய சிங்கள அரசாங்கங்ககளைப்போலவே பௌத்த சிங்கள ஒற்றையாட்சி அலகை தமிழ்ப் பிரதேசங்களில் விரிவு படுத்துகின்றது.

இரண்டு தோத்திரப் பிக்குகளின் தலைமையில் தென்னிலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட சிங்கள மக்கள் தமிழர் பாரம்பரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்க முனைந்தது. தமிழர்களின் வரலாற்று தொல்லிடங்களை மாற்றி அமைப்பதற்கான மிக அண்மைய முயற்சி. மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை முல்லைத்தீவு அரசாங்க அதிபரூடாக மகாவலித்திட்டம் தொடர்பான அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டு சனாதிபதிக்கு மகஜர் ஒன்றைக் கையளித்து நிலையில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது.

அம் மகஜரில் வடமாணத்தில் மகாவலி அபிவிருத்தி திட்டங்களுக்கு கைவிடுமாறும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி L வலய முனைப்புக்களை நிறுத்துமாறும் பேரவை மிக ஆணித்தரமாக வலியுறுத்தயிருந்தது.

இவ்வாறு வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களைத் துண்டாடி சிங்கள கிராமங்களை உருவாக்கி தமிழர் பிரதிநிதித்துவங்கள் குறைக்கப்படுகிறது. மகாவலி L வலயம் மட்டுமல்ல K,J போன்ற வலயங்கள்வடமாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 13ம் திருதத்ததின் கீழ் அரச காணிகள் தொடர்பில் மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை.

அரசகாணிகள் தொடர்பில் மாகாண சபைகள் கலந்தாலோசிக்கப்பட வேண்டுமே தவிர அவை தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே மையப்படுத்தப்பட்டுள்ளது. அரச காணிகள் தொடர்பில் இருக்கும் பெயரளவு அதிகாரங்கள் கூட மகாவலி திட்டங்களின் உள்வரும் காணிகள்தொடர்பில் மாகாண சபைக்கு இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நல்லாட்சி அரசும் சரி இதற்கு முந்தைய சிங்கள அரசாங்கங்களும் சரி தமிழர் அரசியல் பிரச்சினையை இதயசுத்தியோடு அணுகியதாக இல்லை. இச்சம்பவங்கள் தமிழர் தொடர்பில் சிங்கள அரசு தொடர்பில் ஏற்கனவே இருந்த காழ்ப்பணர்வுகளையும் சந்தேங்களையும் வலுப்படுத்துவதாக அமைகின்றது.

இதுவரைக்கும் எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் பேரவை தனது அடுத்த கட்ட நடவடிக்கையைநகர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவை பற்றிய தகவல்களை பேரவை மக்களுக்கு மிக விரைவில் தெரியப்படுத்தும். என தெரிவிக்கப்படுகிறது

Comments
Loading...