தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் பல்கலைகழக மாணவர்களிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சீமான்…

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து  அறிக்கை ஒன்றையும் இன்று  வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ,

சிங்களப் பேரினவாத இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கிற அறப்போராட்டம் பெரும் மகிழ்வினைத் தருவதாகவும்,

ஈழப்போர் நிறைவுற்று பத்தாண்டுகளைக் கடக்கப் போகிற நிலையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் சிறையிலே வைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்  என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  எமது போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால், போராட்ட இலட்சியம் ஒருபோதும் மாறப்போவதில்லை எனும் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புரட்சிகர மொழிகளுக்கேற்ப அன்னைத் தமிழ் சொந்தங்களின் விடுதலைக்காக,

அறப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிற தமிழ் இளையோர் கூட்டத்தின் போர்க்குணத்தினையும், போராட்ட உணர்வினையும் கண்டு உள்ளம் பூரிப்படைகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச விதிகளுக்கு மாறாக சிறைக்கொட்டடிக்குள் வதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிற  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிக்கை என்பது மிக மிகத் தார்மீகமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அதனை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த  கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தனது  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

Comments
Loading...