தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வட மாகாண பாடசாலைகளுக்கு கிட்டத்தட்ட 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டபோதும் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை – விஜயகலா மகேஸ்வரன்..

கடந்த நான்கு வருடங்களில் வட மாகாண பாடசாலைகளுக்கு கிட்டத்தட்ட 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டபோதும்,  எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை என  கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். தெரிவித்துள்ளார்.

தும்பளை சிவப்பிரகாச மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

யுத்தத்திற்கு உட்பட்ட மாகாணம் எனக் கூறி சர்வதேசத்திலே இருந்து நிதிகளை பெற்றுக் கொண்டு வந்து ஏனைய ஏழு மாகாணங்களையும் அபிவிருத்தி செய்தார்கள் என கடந்த கால அரசாங்கத்தை அவர்  கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் எமது பிரதேசங்களில் உள்ள எந்த ஒரு பாடசாலைக்கு சென்றாலும் ஏதோ ஒரு குறையுடன் இருக்கிறதாகவும்,  அக் குறைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணசபைக்கு  இருந்த   நிதிகள் திறைசேரிக்கு திரும்பி சென்ற வரலாறுகள் உண்டு என்றும், தற்போது வட மாகாண சபை இல்லாத காரணத்தால் வடமாகாணசபை  பாடசாலைகளை மத்திய அரசின் கல்வி அமைச்சின் ஊடாக அபிவிருத்தி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்காக  தற்போது மூன்று மாதத்திற்கான நிதி கடந்த வரவுச் செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வரவு செலவு திட்டத்தில் வடக்கு,கிழக்கு, மலையகத்திற்கும்  நிதிகளை கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு மாணவர்கள் கிராம புற பாடசாலைகளில் கல்வி கற்று ஐந்தாம் தர புலமைப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்தி நகர் பாடசாலைகளிற்கு சென்று அப்பாடசாலைகளிற்கே பெருமை தேடிக் கொள்கிறார்கள் என்றும், இதனால் கிராமப் புற பாடசாலைகள் புறம்தள்ளப்படுகிறதாகவும்,  இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொகுதி ரீதியாக ஒவ்வொரு பாடசாலைகளையும்  கட்டாயம் தேசிய பாடசாலையாக உள்வாங்க வேண்டும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இதன்போது மேலும் கூறியுள்ளார்.

Comments
Loading...