தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

4-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 31/3; வெற்றியை நோக்கி இந்தியா

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. விராட் கோலி 243 ரன்களும், முரளி விஜய் 155 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் சண்டகன் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்தது. சண்டிமல் 147 ரன்னுடனும், சண்டகன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 373 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. மேத்யூஸ் 111 ரன்களும், சண்டிமல் 164 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் இசாந்த் ஷர்மா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுக்களும், மொகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள்.

இந்தியா முதல் இன்னிங்சில் 163 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த ரன்னுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தவான் (67), விராட் கோலி (50), புஜாரா (49), ரோகித் சர்மா (50 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 52.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா 409 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 410 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக கருணாரத்னே, சமரவிக்ரமா ஆகியோர் களம் இறங்கினார்கள். இலங்கையின் ஸ்கோர் 14 ரன்னாக இருக்கும்போது சமரவிக்ரமா 5 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து டி சில்வா களம் இறங்கினார்.

4-வது நாள் ஆட்டம் முடிய சிறிது நேரமே இருந்ததால் இலங்கை பேட்ஸ்மேன்கள் கருணாரத்னே, டி சில்வா கவனமாக விளையாடினார்கள். இன்றைய 4-வது நாளின் கடைசி ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கருணாரத்னே 13 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து நைட்வாட்ச்மேனாக லக்மல் களம் இறங்கினார். இவர் 4-வது பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து மேத்யூஸ் களம் இறங்கினார். இவர் இரண்டு பந்துகளையும் தாக்குப்பிடித்து விளையாடினார். இதனால் இலங்கை 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. டி சில்வா 13 ரன்னுடனும், மேத்யூஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இலங்கையின் வெற்றிக்கு இன்னும் 379 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கடைசி நாளில் சுழற்பந்து வீச்சுக்களை எதிர்த்து விளையாடுவது கடினம். மேலும் கடைசி நாளில் 379 ரன்கள் என்பது கடினமான இலக்கு. இதனால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Comments
Loading...