அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. பொதுப்பணித்துறை உள்ளிட்ட 2 நிபுணர்கள் குழு அளித்த அறிக்கைகளும், கல்லூரிக் கட்டடம் வலுவிழந்து உள்ளதையே சுட்டிக்காட்டியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். வலுவற்ற கட்டடத்தில் மாணவர்கள் பயிலும் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், கல்லூரியை இடம் மாற்றுவதால் கல்வியின் தரம் குறையும் என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கல்லூரியை இடமாற்றுவதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்தும், சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர் சித்திக் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.