அம்மா சிறு வணிக கடன்உதவி திட்டம் 3 நாட்கள் நீடிப்பு

ஏழை வணிகர்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெறவழிவகை செய்யும் அம்மா சிறு வணிக கடன்உதவி திட்ட சிறப்பு முகாம்கள் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிகச்சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் தெருவோர சிறு வணிகர்கள், பெட்டிக்கடை நடத்துவோர் முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற் காக, தனியாரிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நிலையை தவிர்க்கவும், ஏழை எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வழிவகை செய்யும் அம்மா சிறு வணிக கடன்உதவி திட்டத்தினை முதல்- அமைச்சர் கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த தெரு வியாபாரிகள், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள், பெட்டிக்கடை நடத்துபவர்கள் போன்ற சிறு வணிகர்கள் பயனடைவார்கள். எளிதில் கடன் பெறும் வகையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலம், அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களுக்கு அருகிலேயே கடந்த மாதம் 22-ந்தேதி முதல் நேற்று (செவ்வாய்க்கிழமை) வரை 10 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

கடந்த 1-ந்தேதி வரை 9 நாட்களில் 4 ஆயிரத்து 470 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 854 விண்ணப்பங்களை சிறு வணிகர்கள் பெற்றுள்ளனர்.   இத்திட்டம் ஏழை எளிய நிலையிலுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளதால் அனைத்து சிறு வியாபாரிகளும் முழுஅளவில் பயன்பெறும் வகையில் மேலும் கூடுதலாக சில நாட்கள் சிறப்பு முகாம்களை நீட்டித்து நடத்த வேண்டும் என்று அரசுக்கு சிறு வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.   அதனடிப்படையில் அனைத்து சிறு வியாபாரிகளும் முழு அளவில் பயனடையும் வகையில் அம்மா சிறு வணிக கடன்உதவி திட்ட சிறப்பு முகாம்கள் மேலும் 3 நாட்கள் அதாவது இன்று 3-ந்தேதி (புதன்கிழமை) முதல் வரும் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அம்மாஉதவிஏழைகடன்சிறப்புசிறுதிட்டம்நீடிப்புமுகாம்வணிகர்கள்வாழ்வாதாரம்
Comments (0)
Add Comment