அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தை நிறுத்துவதுடன், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்றைய தினம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொன்னாலை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என போராட்டத்தில் கலந்துகொண்ட வயோதிப மாது ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
வே.தவமணி (வயது-70) என்ற பெண்மணியே கைதிகளுக்காகத் தீக்குளிப்பேன் எனத் தெரிவித்தவராவார்.
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு நலன்வேண்டி நேற்று பிற்பகல் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி அப்பகுதி மக்கள் வழிபாடு செய்ததுள்ளனர்.
போராட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா, பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத் தலைவர் த.பாஸ்கரன், பொன்னாலை ஸ்ரீ கண்ணன் விளையாட்டுக் கழகத் தலைவர் செ.றதீஸ்வரன், விடுவிக்கப்பட்ட அரசியல் கைதி கோமகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதாக தெரிவிகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.