உயர் அழுத்த மின் பாதை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கும் பணிக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரகுபதி உட்பட 12 பேர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது,

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் வெண்பேடு, காயார் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் உள்ள விவசாய நிலங்கள் வழியாக 748 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.2,400 கோடி செலவில் உயர் அழுத்த மின் பாதை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி, மின் கம்பங்கள் இந்த 2 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்படுவதால், விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்.

மேலும், விவசாய நிலங்கள் வழியாக மின் கம்பங்களை அமைக்க முறையான அனுமதியை தமிழக மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பெறவில்லை. எனவே, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்சார பாதையை அமைக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் வழியாக மின் பாதை அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த திட்டத்தின் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால், மின்பாதை அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தரவுஐகோர்ட்டுதடைதமிழக அரசுபணிமின்பாதைவிசாரணைவிவசாய நிலங்கள்
Comments (0)
Add Comment