உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையாளர் பி.சீத்தாராமன் வேண்டுகோள்

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெ தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளர் பி.சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்கவும், மேற்பார்வையிட்டு ஆய்வு செய்யவும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைக் கொண்ட 37 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையாளர் சீத்தாராமன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, தேர்தல் பார்வையாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து சீத்தாராமன் பேசியது: வாக்காளர் பட்டியல்கள் தேவையான எண்ணிக்கையில் உள்ளனவா என சரிபார்க்க வேண்டும். அதிகமான அளவில் வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்ய வேண்டும். பெறப்பட்ட வேட்பு மனுக்களின் விவரங்களை அறிந்து வைத்திருப்பது அவசியம்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணிகளுடன் தொடர்புடைய அலுவலர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். வாக்குப்பதிவு-அது தொடர்பான பொது மக்களின் குறைகளையும், புகார்களையும் தொடர்புடைய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் தீர்த்து வைக்க வேண்டும்.
நடத்தை விதிகள்: கட்சி அடிப்படையில் வாக்குச் சீட்டுகள் அச்சடித்தல் குறித்து மேற்பார்வை செய்யவும், மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவைப்படும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை உறுதியாகப் பின்பற்றுவதுடன், விதிமீறல்கள் இருந்தால் புகார் செய்ய வேண்டும். தேர்தல் முடிவுற்றது தொடர்பாக அறிக்கை அனுப்புவதுடன், வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட்டு, அதன் முடிவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என மாநிலத் தேர்ல் ஆணையாளர் சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்உள்ளாட்சித் தேர்தல்தேர்தல் ஆணையாளர்பி.சீத்தாராமன்
Comments (0)
Add Comment