இதுகுறித்து வர்த்தகத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள ஐ.டி. அல்லது ஐ.டி. சார்ந்த சேவை நிறுவனங்களின் ஊழியர்கள், வீட்டில் இருந்தபடியோ அல்லது அந்த வளாகத்துக்கு வெளியில் இருந்தபடியோ பணியாற்ற அனுமதிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என பல்வேறு நிறுவனங்களின் கோரிக்கைகள் எங்கள் அமைச்சகத்துக்கு வந்துள்ளன.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்தோம்.
வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான பொதுவான நிபந்தனைகளை, எங்கள் அமைச்சகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் ஆணையர்கள் பட்டியலிட்டனர்.
அதன்படி, வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர், அந்த நிறுவனத்தின் நிரந்தரப் பணியாளராக இருக்க வேண்டும். அவ்வாறு உள்ள பணியாளரையே அந்த நிறுவனம் அனுமதிக்க வேண்டும்.
வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படும் ஊழியருக்கு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட பணிகளையே வழங்க வேண்டும்.
மேலும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு மடிக்கணினியையோ அல்லது கணினியையோ வழங்க வேண்டும்.
ஊழியர்களுக்கும், நிறுவனத்துக்கும் இடையே பாதுகாக்கப்பட்ட இணையதள இணைப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.