திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் மீது கன்னட நடிகை மைத்திரி குற்றம்சாட்டியுள்ளார்.
மங்களூரைச் சேர்ந்த மைத்திரி கவுடா, கடந்த ஆண்டு கன்னட நடிகர் உபேந்திரா நடித்த டோபிவாலா என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். கடந்த மே 8 ஆம் தேதி மங்களூருவில் கார்த்திக் கவுடாவை சந்தித்ததாகவும் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர், ஜூன் 5 ஆம் தேதி மங்களூருவில் உள்ள கார்த்திக் கவுடாவின் வீட்டில் வைத்து அவர் தன்னை திருமணம் செய்து கொண்டதாக மைத்திரி கூறியுள்ளார். பிறகு இருவரும் தனித்தனியாக வசித்து வந்ததாகவும் நடிகை மைத்திரி தெரிவித்தார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த குற்றச்சாட்டை சதானந்த கவுடாவும், அவரது மகனும் மறுத்துள்ளனர். தனது தந்தை சதானந்த கவுடாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்த அபாண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கார்த்திக் கவுடா தெரிவித்தார்.