காணிகள் விடுவிக்கப்படுமா?இல்லையா? நாளை பேச்சுவார்த்தை

வட.கிழக்கில் முப்படைகளது ஆக்கிரமிப்பில் காணப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பினில் மக்கள் போராட்டங்கள் தொடர்கின்ற நிலையினில் முப்படைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்காவின்பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையே நாளையதினமான திங்கட்கிழமை இடம்பெறுமென கூட்டமைப்பினரால் ஊடகங்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சந்திப்பில் முப்படையினைச் சேர்ந்த அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதுடன் இவற்றுக்கான தீர்வுகளும் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கூட்டமைப்பினால் அமைச்சர்களென அடையாளப்படுத்தப்பட்டுள்ளபோதும் அதிகாரமேதுமற்ற மீள்குடியேற்ற அமைச்சரான டி.எம்.சுவாமிநாதன் மட்டுமே பங்கெடுக்கவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணிகளை விடுவிப்பது தொடர்பினில் முப்படைகளே முடிவெடுக்கமுடியுமென மைத்திரி –ரணில் தரப்பு கைவிட்டுள்ள நிலையினில் தொடரும் நிலமீட்பு போராட்டம் கூட்டமைப்பிற்கு எதிரான நிலைப்பாடாக மாறிவருகின்றது.
இந்நிலையினில் மக்கள் போராட்டங்கள் எதிராக திரும்பியுள்ள நிலையினில் வாக்குவங்கியை தக்கவைக்க பேச்சுக்கள் நடப்பதாக கண்கட்டு நாடகங்களை அரங்கேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியென கூறப்படுகின்றது.

இராணுவம்காணிகள் நிலம்கூட்டமைப்புதமிழர்கள்
Comments (0)
Add Comment