14 நாட்களாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்தால் அவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் எனும் நோக்கிலும் ஏனைய வன்னி மாவட்டத்தில் தனியார் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்திருப்பது சம்பந்தமாகவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை, நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பிரபா கணேசன் தெரிவித்ததாவது, “யதார்த்த நிலைமையில் கேப்பாப்புலவு மக்கள் வாழ்ந்த நிலப்பரப்புடன் இணைந்ததாக இராணுவத்தின் சிறு ஆயுதக் குதம் அமைந்திருப்பதால் எதிர்காலத்தில் பொது மக்களின் பாதுகாப்பு கருதியே இதுவரை அந்த நிலப்பரப்பு விடுவிக்க முடியாதிருக்கிறது.
அவர்களுடைய நியாயமான கோரிக்கையைப் புரிந்து கொண்டு அதனுடன் ஒட்டி இணைந்திருக்கும் நிலப்பரப்பை அவர்களுக்காக வழங்கி அவர்களுக்கு தேவையான வீடமைப்பையும் செய்து கொடுக்க முடியும் என, இச்சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பூரண இணக்கம் தெரிவித்ததுடன், இதனை அம்மக்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இரண்டு நாட்களுக்குள் அமைச்சர் மக்களை நேரில் சந்தித்துப் பேசி நிலப்பரப்பை கொடுப்பதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் எனும் கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டார்.
மேலும், இராணுவம் தனியார் காணியை தன்வசப்படுத்திக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்தைவலியுறுத்தினோம்.கேப்பாப்புலவு விடயத்தில் இராணுவத்தினர் நேரடியாக பொது மக்களை கட்டுப்படுத்த முனைவது இன்றைய நல்லாட்சியில் அனுமதிக்கப்படக் கூடியதொன்றல்ல. இதேவேளை அதீத இராணுவப் பிரசன்னம் யுத்தத்தின் பின்னரான இன்றைய நல்லாட்சியின் காலகட்டத்தில் யுத்தம் இன்றும் உள்ளதான ஒரு காட்சியையே கொடுக்கின்றது. அதன் காரணமாக சாதாரண சிவில் நிலைமைகளின் கீழ் பொலிஸாரின் தொகை அதிகரிக்கப்படலாம்.
ஆனால் இராணுவத்தின் நடமாற்றம் அதிகமாக காணப்படுவது ஏற்றுக் கொள்ளகூடிய ஒன்றல்ல என கலாநிதி குமரகுருபரன் கூறிய விடயத்தையும் ஏற்றுக் கொண்ட அமைச்சர் இது தொடர்பாக பிரதம மந்திரி அவர்களும் இதே மனநிலையில் தான் இருக்கின்றார். வெகு விரைவில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்படும். ஆனால், அவர்களுக்கான மாற்று இடம் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே காலதாமதத்துக்குக் காரணம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்” என்றார்.