தமிழீழ மக்களின் பொருளாதரத்தை விழுங்கி பணியவைக்கும் சிங்களம்…!!! பார்வை (16/02/2014 – 22/02/2014)

பொருளாதாரம் ஒருநாட்டின் முதுகெலும்பு, அதே போல் ஓர் இனத்தின் இருப்பு அவ்வினத்தின் விருத்தி மற்றும் வெற்றியிலும் பொருளாதார வளம் பெரும் பங்காற்றுகின்றது. எதிரி நாட்டை வெற்றி கொள்ளும் எப்படையணியும் முதலில் குறிவைப்பது அந்நாட்டின் பொருளாதார வளத்தையே. இவ்வாறே தமிழீழத்தை ஆக்கிரமித்த சிறீலங்கா அரசாங்கமும்  ஈழத்தமிழரின் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களையும் முடிந்த வரை அழித்தொழித்ததுடன் பல மில்லியன் கணக்கான சொத்துக்களை கவர்ந்து கொண்டது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் வருமானத்துறைகளையும் அழித்தொழித்த சிறீலங்கா வல்லாதிக்க அரசு, இப்போது ஈழத்தமிழரின் பொருளாதாரத்தின் மீது பல்முனைத்தாக்குதலை தொடுத்துள்ளது. இரகசியமானதும் மிகவும் திட்டமிட்ட முறையிலான இத்தாக்குதலை எதிர் கொள்ளுவதற்கும் அதனை முறியடிப்பதற்கும் இவை தொடர்பான ஆழமான அறிவும் விழிப்புணர்வும் ஒவ்வொரு தமிழனுக்கும் அத்தியாவசியமானதாகும். இவ் விழிப்புணர்வின் முதல் படியாக தமிழினத்தின் பொருளாதர கட்டமைப்பை பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழீழம் மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட வளமான நிலப்பரப்பை கொண்ட அழகிய நாடாகும். இந் நிலத்தில் மக்கள் விவசாயம் மற்றும் கடற்றொழிலையும் பிரதான தொழில்துறைகளாக கொண்டிருந்தனர். இங்கு வாழ்ந்த ஈழத்தமிழர்களினால் தமது நாட்டிற்கு தேவையான உணவை தன்னிறைவாக உற்பத்தி செய்யக்கூடிய வலு இருந்ததுடன் இறக்குமதிக்காக எந்நாட்டையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இத்தன்னிறைவு உற்பத்தி வளமே சிறீலங்காவினால் பன்னெடுங்காலமாக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளையும் ஈழத்தினால் எதிர்த்து நிற்க முடிந்தது. இக்காலகட்டத்தில் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தமக்கு தாமே முதலாளிகளாகவும் இருந்தனர். பொருளாதார அடிமைத்தனம் மற்றும் முதலாளித்துவ ஒடுக்குமுறை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. பொருளாதார அதிகாரம் ஒரு சிறுபான்மையினரிடம் குவிந்திராமல் முதலீட்டு வளம் பரந்துபட்டதாகவும் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதாகவும் இருந்தது.

2009ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பின் பின் சிறீலங்கா அரசு தமிழீழத்தின் இந்த பொருளாதார முறைமையை மாற்றியமைப்பதில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதன் அங்கமாகவே தமிழர்களின் சுயதொழில் வளங்களான விளைச்சல் நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் கடல் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை முடிந்தவரை தடைசெய்துள்ளது. மறுவளத்தே அபிவிருத்தி என்னும் பெயரில் ஆடைத்தொழிற்சாலைகளையும் இதர தொழிற்சாலைகளை தொடங்குவதற்கும் சுற்றுலா தொழிற்துறையை விரிவாக்குவதிலும் முழுமூச்சாக கவனம் செலுத்தி வருகின்றது. வெளிப்பார்வையில் இவை அபிவிருத்தியின் ஓர் அங்கமாக தெரிந்தாலும் இதில் மறைந்திருக்கும் மூலோபாயமானது தமிழரின் தன்னிறைவு பொருளாதாரத்தை தகர்த்து இறக்குமதியில் தங்கியிருக்கச் செய்வதே ஆகும்.

ஈழத்தமிழரின் விவசாய உற்பத்திகளை முடக்கி தமது உணவுத்தேவைக்காக தெற்கைச் சார்ந்திருக்கச் செய்வதே இதன் குறிக்கோள் ஆகும். இது மாத்திரமல்லாமல் கொழும்பின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் தமது கிளைகளைத்திறந்து கடன்களைத் தாராளமாக வழங்குகின்றன. இவை தவிர எவ்வித நிதியியல் வரைமுறைக்கும் உட்படாத பல வட்டி முதலாளிமாரும் தமிழீழம் எங்கும் கடன்களை அள்ளி வழங்குகின்றனர். இம் முதலாளிமாருக்கு பின்னால் சிறீலங்கா அரசின் கரங்கள் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவர்களின் இக்கடன் வழங்கல் தமிழரின் மீதான பாசமோ அல்லது தமிழரின் அபிவிருத்தியிலான அக்கறையோ அல்ல மாறாக ஈழத்தமிழினத்தை சிங்கள பேரினவாதத்திற்கு பொருளாதார அடிமைகள் ஆக்குவதே.

அத்துடன் இவ்வங்கிகளில் வைப்பில் இடப்படும் தமிழரின் மூலதனம் வடகிழக்கின் பொருளாதார சுழற்ச்சிக்கு உள்ளாக்கப்படாமல் தெற்கின் அபிவிருத்தியிலேயே முதலிடப்படுகிறது. இவை மாத்திரம் அல்லாது தமிழரின் தொழிலாளர் வளமான இளைஞர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதிலும் சிறீலங்கா அரசு தீவிரமாகவே இருக்கின்றது.

தமிழீழத்தின் பொருளாதாரத்தின் மீது சிறீலங்கா அரசினால் தொடுக்கப்பட்டுள்ள இவ்வாறான மறைமுக பல்முனை தாக்குதல்கள் தொடர்பாகவே செண்பகம் இவ்வாரம் தனது பார்வையை செலுத்துகின்றது. இவ்வாறே ஒவ்வொரு ஈழத்தமிழரும் தம்மீது தொடுக்கப்பட்டுள்ள பொருளாதார தாக்குதல் தொடர்பாக கவனஞ் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஈழத்தமிழரும் தம்மைச்சுற்றி பின்னப்பட்டுள்ள இவ் வலையில் சிக்காது இருப்பது தொடர்பாககவும் சிந்திக்க வேண்டும். அத்துடன் எமது தன்னிறைவு பொருளாதாரத்தை தொடர்ந்து பாதுகாப்பதுடன் எவ்வாறு அதற்கு தொடர்ந்தும் பங்களிப்பு செய்யலாம் என்றும் சிந்திக்க வேண்டும். அதேவேளை புலம் பெயர் நாடுகளிலிருந்து தமது தாயக உறவுகளுக்கு பொருளாதார உதவிகளை வழங்கும் தமிழரும் தனித்து நாளாந்த தேவைகளுக்கு மட்டும் உதவிகளை வழங்காது பொருளாதார ரீதியாக தமது உறவுகளை நிலைப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

முக்கியமாக விவசாய உற்பத்திகளுக்கும் சிறு தொழிற்துறைகளுக்கும் உறுதுணையாக நிற்க வேண்டும். அது தவிர புலம் பெயர் தேசங்களிலிருந்து ஈழதேசத்தில் தொழில் முயற்சிகளை தொடங்கும் நிறுவனங்களும் முதலீடுகளை ஓர் இடத்தில் குவிக்காது தாயத்தின் தேவையை கருத்தில் கொண்டு முதலீடுகளை பங்கிட்டு, இலாபத்தில் மட்டும் குறிக்கோளாக இல்லாது எமது சமூகத்தை பொருளாதார ரீதியில் வளப்படுத்த முன்வர வேண்டும். குறிப்பாக வடக்கில் மாத்திரம் அல்லாது தமிழர் தாயகமான கிழக்கிலும் முதலீடுகளை பன்முகப்படுத்த வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் ஈழத்து பொருளாதார நிபுணர்கள் தமிழீழத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார போரினை ஆழமாக ஆராய்ந்து அதனை முறியடிப்பதற்கான தீர்க்கமான தீர்வுகளையும் மூலோபாயங்களையும் முன்வைக்குமாறும் செண்பகம் வேண்டி நிற்கின்றது.

செண்பகத்தின் பார்வை
Comments (0)
Add Comment