சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட வந்த திபெத்தியர்களை போலீசார் கைது செய்தனர். சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து திபெத்தை விடுவிக்கக் கோரி உலகெங்கும் வாழும் திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் வசிக்கும் திபெத்தியர்கள் , அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதகரத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து 10 பெண்கள் உள்பட 24 திபெத்தியர்களை போலீசார் கைது செய்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். காவல்துறை உயர்அதிகாரிகள் விசாரணை நடத்திய பின் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.