கடந்த மாதம் 25-ந் தேதி முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் ஜெயில் காவலர்கள் திடீரென சோதனை நடத்தி 2 செல்போன்களை கைப்பற்றினார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் முருகன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
முருகன் ஜெயிலில் சாமியார் போல் இருப்பதாகவும், அடிக்கடி மவுன விரதம் இருப்பதாகவும், தகவல்கள் வந்தது.
அதனை நிரூபிக்கும் வகையில் நேற்று கோர்ட்டில் ஆஜராக வந்த முருகன் காவி வேட்டி, துண்டு அணிந்தபடி வந்தார். குடுமியும், நீண்ட தாடியும் வளர்த்திருந்தார். நெற்றியில் நாமம் போட்டு இருந்தார்.
மாஜிஸ்திரேட்டு அலிசியா முன்னிலையில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்தார்.
அப்போது மாஜிஸ்திரேட்டிடம் முருகன் கூறுகையில், ‘என் தாயார் சோமணி வெற்றிவேல் இலங்கையில் இருந்து என்னை பார்ப்பதற்காக வேலூர் வந்துள்ளார். அவர், 2 முறை என்னை பார்க்க ஜெயிலுக்கு வந்தும், அவரால் என்னை சந்திக்க முடியவில்லை. எனவே, அடுத்த வாய்தாவின் போது என்னை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தாமல் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். அப்படி உத்தரவிட்டால் என் தாயார் என்னை நேரில் பார்த்துவிட்டு செல்வார்’ என்றார்.
பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த முருகனிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, அவர் நிருபர்களை பார்த்து கைகூப்பி கும்பிடுவது போல் பாவனை காட்டியவாறு சென்றார்.
இதையடுத்து முருகன் மீண்டும் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்ட பிறகு நேற்று தான் முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.