மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் நேற்று முன்தினம் உருவானது. இந்த தாழ்வு மண்டலம் புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இருப்பினும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, தாழ்வு மண்டலமாக மாறி அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு 350 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறி இன்று மாலை அல்லது இரவுக்குள் மியான்மர் கடற்கரை ஒட்டியுள்ள பகுதியை நோக்கி செல்லும்.
தென் தமிழகத்தில் இருக்கும் காற்று அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கி செல்வதால், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
சோழவந்தான் 10 செ.மீ., உசிலம்பட்டி, பேரையூர் தலா 8 செ.மீ., வாடிப்பட்டி 7 செ.மீ., நிலக்கோட்டை, சூரங்குடி, கந்தர்வகோட்டை, திருமங்கலம் தலா 5 செ.மீ., மணியாச்சி, நத்தம், பெரியகுளம், விளாத்திகுளம், கோவில்பட்டி, காரைக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.