இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,மழை, வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் கடுமையாக சேதம் அடைந்திருப்பதாகவும், பயிர்ச்சேதம், கால்நடைச் சேதம் என பல்வேறு வகையில் மக்களுக்கு வாழ்வாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மத்திய ஆய்வுக் குழு தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டுச் சென்ற பின்னர்தான், அளவுக்கதிகமான மழையால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.‘
தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்புக்கு 17 ஆயிரத்து 431 கோடியே 51 லட்ச ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே கேட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜெயலலிதா, கடந்த மாதம் 23-ம் தேதி 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் நிதி கேட்டு கடிதம் எழுதியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மொத்தமாக, தமிழகத்தில் வெள்ள சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்ச ரூபாய் தேவை என்று பிரதமரை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக நிதியமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.