இதனைத்தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிசறமுகாமின் அதிகாரியாக இருந்தவரும் தற்போது, கடற்படை லெப்டின் கொமாண்டராக உள்ளவருமான தம்மிக அனில் மாபாவை, மார்ச் 9ஆம் திகதி திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி உத்தரவிட்டார். அத்துடன், லெப்டினன் கொமாண்டர் தயானந்தவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக அவருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் அவர் பயிற்சி முகாமொன்றில் இருப்பதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த சீ.ஐடியினர், 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்குத் தகவல் வழங்கியுள்ளதாகக் கூறினர்.
பக்கரிசாமி லோகநாதன், இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோர், 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வானொன்றில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகவும் அந்தக் கடத்தற் சம்பவத்துடன் தொடர்புடைய வான், வெலிசறை கடற்படை முகாமுக்குப் பின் பகுதியில் இருந்தாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். அத்துடன், கடத்தப்பட்டவர்களில் ஒருவரான லோகநாதன் என்பவரின் அலைபேசியில் சிம் அட்டை மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டமை தமது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது.