திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இன்று ஐந்தாவது நாளாக ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
நீண்டகாலமாக அநாவசியமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுவிக்க, கியூ பிரிவு காவல்துறையினரும் அரசாங்கமும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். மேலும் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களில் 6 பேர், விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சித்ததாகவும், ஏனைய நான்கு பேர் அகதியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பா.சிவனேஸ்வரன்,த. மகேஸ்வரன், க.மகேஸ்வரன், க.கிருஷ்ணமூர்த்தி,ஞா.சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் ஆவணங்களின்றி இந்தியா வந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள், தங்களை சிறப்பு முகாமிலிருந்து விடுவித்து, அகதிகள் முகாம் அல்லது வெளியிடத்தில் தங்கிக்கொண்டு வழக்குகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலதடவை உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். இவ்வாறு சிறப்பு முகாம்களில் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து பிரித்து, பல வருடங்களாக அடைத்து வைத்திருப்பதினால் தாங்கள் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை மகேந்திரன் என்பவர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இதனையடுத்து மற்றவர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சிறைத்துறையினர் மற்றும் அகதிகளுக்கான சிறப்பு அதிகாரிகள் மற்றும் போலீஸார் போராட்டத்தை கைவிடுமாறு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் சென்னையிலுள்ள சிறப்பு முகாம்களில் இவ்வாறு உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.