தி.மு.க. ஆட்சியில் அதிக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உருவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.டி. நிறுவனங்களில் பணி புரிபவர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசினார்.  ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பல்வேறு தரப்பட்ட மக்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சந்தித்து அவர்களுடைய கருத்துகளையும், குறைகளையும் கேட்டு வருகிறார்.

இதுவரை சென்னைக்குட்பட்ட தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து விட்டார். தற்போது கடந்த சில தினங்களாக சென்னை தொகுதிக்குட்பட்ட மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஐ.டி. நிறுவனங்களில் பணி புரிபவர்களை நேற்று சந்தித்து பேசினார்.  அப்போது, ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி பாதுகாப்பு இல்லை, ஐ.டி. நிறுவனங்களை அரசு ஏற்று நடத்தலாம், ஐ.டி. நிறுவனங்களில் பணி புரியும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இவற்றையெல்லாம் கேட்ட தி.மு.க. பொருளாளர் பின்னர் அவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-  நமக்கு நாமே பயணம் இத்தோடு நின்று விடாது. தொடர்ந்து உங்களை நான் நேரில் சந்திப்பேன்.

உங்களுக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருவேன். வெள்ளத்தால் ஐ.டி. நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதை பார்த்து மிகவும் வருத்தமுற்றேன்.   தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பத்தின் தந்தை கலைஞர். ஏனென்றால் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு வந்தது அவர் தான். முதலில் 35 கம்பெனிகள் இடம் பெற்றன. 2010-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் பற்றி அறிவு சார்ந்த கட்டுரைகளை வெளியிட வழிவகை செய்தோம்.  தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த 3 முதன்மை மாநிலங்களில் தமிழகமும் அப்போது இடம் பெற்றிருந்தது. தகவல் தொழில் நுட்ப கொள்கை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. தமிழகத்தில் ஐ.டி. நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் தொலைநோக்கு பார்வை எதுவும் இல்லாமல், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பின்தங்கியுள்ளது. புதிய டைட்டில் பார்க் எதுவும் வரவில்லை.

ஐ.டி. நிறுவனங்கள் செயலிழந்து கிடக்கிறது.   தகவல் தொழில் நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அறிவு சார்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களை வைத்து ஐ.டி.யில் மாபெரும் புரட்சியை கொண்டு வரமுடியும். நம்மிடம் உள்ள இளைஞர்களை வைத்து மாநிலத்தை மாற்ற முடியும். இளைஞர்களிடம் இருந்து தான் புதிய சிந்தனைகள் பூத்து குலுங்கும். அந்த பூக்களை மாலையாக்க ஓர் அரசு வேண்டும். அந்த அரசு தி.மு.க.வாக இருக்கும்.  தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்(ஐ.டி.) உருவாக நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பம் குறித்த பாடங்கள் அதிகளவில் இடம் பெற செய்யப்படும். சென்னை ஐ.டி. துறையில் சிறந்த இடம் என்று உருவாக்கப்படும்.   அதற்கான உள்கட்டமைப்புகளை கொண்டு வருவோம். வெள்ளத்தால் ஐ.டி. கம்பெனிகள் மிகவும் பாதிக்கப்பட்டன.

அதுபோன்ற சூழல் வரக்கூடிய காலங்களில் பேரிடம் மேலாண்மை திட்டம் கொண்டு வருவோம். போக்குவரத்து பிரச்சினைகள் நீக்கப்படும்.  தொலைத்தொடர்பு வசதி, விமானநிலையம் மற்றும் ரெயில் நிலையங்களுக்கு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் சென்று வருவதற்கு வசதி செய்து தரப்படும். சென்னையை தவிர, மற்ற மாவட்டங்களிலும் ஐ.டி. கம்பெனிகள் உருவாக்கப்படும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.   மல்டிமீடியா, அனிமேஷன் முன்னேற்றத்தை யாரும் மறக்க முடியாது. எனவே தி.மு.க. ஆட்சியில் ‘மீடியா பார்க்’ உருவாக்கப்படும்.

உலகத்தரம் வாய்ந்த கம்பெனிகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவோம். ஐ.டி. தொழில் தொடங்க தனிப்பிரிவு அமைக்கப்படும். புதிய தொழில்தொடங்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.   என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வழிவகை செய்யப்படும். அரசு சேவைகள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. அரசின் அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் மக்களுக்கு கிடைக்க அதிக வேகம் கொண்ட இணையதளம் கொண்டு வரப்படும்.

அரசு சேவைகளை உரிய காலத்தில் வழங்க சேவைபெறும் உரிமை சட்டம் கொண்டு வரப்படும். தமிழ்நாட்டில் தொழிற்சாலை தொடங்க பயப்படுகிறார்கள். அந்த நிலை தி.மு.க. ஆட்சியில் இருக்காது. அவர்கள் தொழில் தொடங்க எங்கள் ஆட்சியில் காத்திருக்க வேண்டிய நிலைவராது. தொழில்துறை, டைட்டல் பார்க் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சியாக தி.மு.க. இருக்கும்.  இவ்வாறு அவர் பேசினார்.

ஆட்சிஎண்ணிக்கைகஐடிதகவல்திமுகதொழில்நுட்பம்நடவடிக்கைநிறுவனம்பணிமுக.ஸ்டாலின்
Comments (0)
Add Comment