தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்த்தடுப்பு மாத்திரைகளை தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர் சொட்டு மருந்து வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மூலம், 43 ஆயிரத்து 51 முகாம்கள் வாயிலாக, சுமார் 6 புள்ளி 6 லட்சம் குழந்தைகளுக்கு 2-வது கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு மிகவும் குறைவு என தெரிவித்த அவர், இந்த நோயை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். மேலும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வங்களில், பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்கான கட்டணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், நோய்த்தடுப்பு மாத்திரைகளை இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.