பள்ளிகள் திறப்பு குறித்து புதிய அறிவிப்பு ஓரிரு நாளில் அரசு வெளியிடும்

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 55 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆரம்ப, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் என பிரிக்கப்பட்டு தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அரசு பள்ளிகளில் 3 லட்சம் ஆசிரியர்களும், தனியார் பள்ளியில் 2½ லட்சம் ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். ஏப்ரல் மாதம், இறுதி வரை பள்ளி இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டன. மே மாதம் முழுவதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜூன் 1-ந்தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது. ஆனால் கோடை வெயில் கடந்த காலங்களை விட இந்த வருடம் கடுமையாக தாக்கி வருகிறது. வெப்ப காற்று வீசுகிறது. வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சென்னை உள்பட பல நகரங்களில் வெயிலின் உக்கிரகம் இன்னும் குறையவில்லை.

100 டிகிரிக்கு மேலாக கொளுத்துகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. பள்ளி குழந்தைகளின் நலன் கருதி ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று மாணவர்-பெற்றோர் நல சங்கமும் ஆசிரியர் கூட்டணியும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் முதல்-அமைச்சருக்கு வைத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் 107 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனல் காற்றுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள். 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் பள்ளி குழந்தைகள் உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். எனவே மாணவர்களின் நலன் கருதி வெயிலின் அளவு குறையும் வரை ஒரு வார காலத்திற்கு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

தலைமை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலாளருடன் நடந்த ஆலோசனையில் கடந்த 5 வருடங்களில் பள்ளிகள் எந்தெந்த தேதிகளில் திறக்கப்பட்டது, வெயிலின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வானிலை ஆய்வு மையத்திலும் முழு விவரங்கள் கேட்கப்பட்டன. வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளதா? இதே நிலைதான் நீடிக்குமா என்பது பற்றியும் விரிவான தகவல் கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்விதுறை அதிகாரிகள் கூறுகையில், ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் அன்றே இலவச பாடப் புத்தகம், சீருடை போன்றவை வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வெயில் தாக்கத்தால் பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்படுவது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து முடிவு எடுக்க கூடியது. அவர்கள் மட்டத்தில் ஆலோசித்து வருகின்றனர். இன்று அல்லது நாளைக்குள் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய அறிவிப்பு அரசு வெளியிடும் என்றனர். புதுச்சேரியில் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்தது. கோடை வெப்பத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 6-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அது போல தமிழகத்திலும் ஒத்தி வைக்கப்படலாம் என தெரிகிறது. ஓரிரு நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுஒத்திவைப்புதனியார்தமிழ்நாடுதாக்கம்திறப்புபள்ளிகள்வெயில்
Comments (0)
Add Comment