மீனவர்களின் பிரச்சனை தொடர்பான ஆதங்கத்தை கொட்டிதீர்த்த கலைஞர்

தமிழக மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். மீன் பிடித் தடைக்காலம் முடிந்து, மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளிலேயே 7 மீனவர்களை இலங்கைக் கடற்படை இரக்கமின்றிப் பிடித்துச் சென்றிருப்பது, கடும் வெறுப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “Men may come and Men may go, But I will go on for ever” என்று நதியொன்று பாடுவதாக ஆங்கிலக் கவிஞர் டென்னிசன் எழுதிய ஒரு கவிதை உண்டு.

அதைப் போல இலங்கையில் எத்தனை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், நம்முடைய மீனவர்கள் பிரச்சினைக்கு மட்டும் முடிவு காலமே ஏற்படாது போல உள்ளது! 45 நாட்கள் மீன் பிடித் தடைக் காலம் முடிந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளே தமிழக மீனவர்கள் ஏழு பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். மீன் பிடி தடைக்காலம் முடிந்து நேற்றையதினம் தான் கிழக்குக் கடற்கரை பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள்.

இவர்களில் பலர் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கி, விரட்டி அடித்ததுடன், சேசு இருதயம் என்பவரின் விசைப்படகையும், அதிலிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் சிறைப் பிடித்துச் சென்றுள்ளனர். மீன் பிடித் தடைக்காலம் முடிந்து, மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளிலேயே இவ்வாறு 7 மீனவர்களை இலங்கைக் கடற்படை இரக்கமின்றிப் பிடித்துச் சென்றிருப்பது, இந்திய மீனவர்கள் மத்தியில் கடும் வெறுப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டதற்கு இராமேஸ்வரம் மீனவர் சங்கம் தனது கடுமையானக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பதவியேற்றதும் உடனடியாக டெல்லி சென்று பிரதமரையும், மற்ற மத்திய அமைச்சர்களையும் நேரில் பார்ப்பதும், அவர்களிடம் மாநிலப் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் விவாதிப்பதும் வாடிக்கை. அதைப் பயன்படுத்திக் கொண்டு கூட நம்முடைய முதலமைச்சர் டெல்லி சென்று இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் அவ்வப்போது சிறைப் பிடிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு முடிவின்றி தொடரும் துயரத்தை எடுத்துக் கூறித் தீர்வு காண முயற்சி செய்திருக்கலாம். ஏற்கனவே இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து இரண்டு நாடுகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு காணப்படாமல் அந்தரத்தில் தொங்குகிறது.

இந்தத் தீர்வு எட்டப்படாத பிரச்னையில் தகுந்த முடிவு காண இந்திய அரசு இனியாவது அக்கறை செலுத்துமா? அல்லது எப்போதும் நடைபெறுகின்ற ஒரு தொடர் சம்பவம் தானே என்று அலட்சிய எண்ணத்தோடு விட்டு விடுமா? மாநில அரசு, மத்திய அரசை நேரடியாகச் சென்று சந்தித்து மீனவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடத் தேவையான அக்கறையோடும் அனுதாபத்தோடும் முயற்சிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆதங்கம்கருணாநிதிகலைஞர்தமிழகம்பிரச்சனைமீனவர்
Comments (0)
Add Comment