முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

வன்னி இறுதிப் போரின் போது உயிரிழந்த முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவு கூறுவதற்கு நினைவாலயம் அமைக்க பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக வளாக முன்றலில் அதனை அமைக்கும் பணிகளை அவர்கள் கடந்த புதன்கிழமை ஆரம்பித்திருந்தனர்.

எனினும் அந்த இடத்தில் நினைவாலயம்  அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேச்சு வார்த்தைகள்

இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை பேச்சு வார்த்தைகள்  இடம்பெற்றன.

குறித்த பேச்சு வார்த்தையின்போது  பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறு உயர்மட்டத்தினரால் மாணவர் ஒன்றியத்திடம் கோரப்பட்டது.

மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அதற்கு இணக்கம் தெரிவித்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் நேற்று   பிற்பகல் வரை அமைக்கப்பட்டு வந்தது.

இந் நிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவாலய பணிகளை தற்போதுள்ள நிலையுடன் இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக பல்கலைக்கழக  மாணவர்களால்  முன்னெடுக்கப்பட்ட   நினைவாலயம் அமைக்கும் பணிகள் நேற்று மாலையுடன் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நினைவாலயம்மானியங்கள் ஆணைக்குழுமுள்ளிவாயக்கால்யாழ் பல்கலைக்கழகம்