ராஜீவ் காந்தி கொலை கைதிகளுக்கெதிராக மத்திய அரசு கொடுத்த மனுக்கான விசாரணை நடைபெறுகின்றது

ராஜீவ் காந்தி கொலை கைதிகளான நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 4 பேரை விடுதலை செய்வது குறித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீது 27–ந்தேதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் கூறினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை, கடந்த 18–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அரசு முடிவு செய்யலாம் எனவும் தீர்ப்பு அளித்தது.

இதைத்தொடர்ந்து, முருகன், சாந்தன், பேரறிவாளன், மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பிற கைதிகளான நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜீவ் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியவர்களான இந்த நால்வரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார். பின்னர் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணை வருகிற 27–ந்தேதி நடைபெறும் என்று கூறினர். அதன்படி இன்று விசாரணை நடைபெறுகிறது.

ரஜீவ் கொலை வழக்கு
Comments (0)
Add Comment