அடுக்கடுக்கான சிக்கல்களில் தமிழக விவசாயிகள் – ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களிலும், மற்ற பகுதிகளிலும் குறுவை சாகுபடி முடிவடைந்து அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் உழவர்கள் தடுமாறி வருகின்றனர்.  நடப்பாண்டிற்கான கொள்முதல் விலையை அரசு இன்னும் அறிவிக்காததும், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததும் தான் இதற்கு காரணமாகும்.  

குறுவை பருவ அறுவடை வழக்கமாக செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என்பதால், அந்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் காவிரி பாசன மாவட்டங்களிலும், மற்ற பகுதிகளிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் போதிய அளவில் திறக்கப்படும்.  நெல்லுக்கான கொள்முதல் விலையையும் செப்டம்பர் மாத இறுதியிலேயே தமிழக அரசு அறிவிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நெல் கொள்முதல் விலை மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு குறித்து இன்று வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தீப ஒளி திருநாளுக்கு இன்னும் 15 நாட்களுக்கும் குறைவாக உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை என அடுக்கடுக்கான சிக்கல்களில் தமிழக விவசாயிகள் சிக்கித் தவிக்கின்றனர்.  நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதமே அறிவித்து விட்டது. சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1470 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1510 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து விட்டது.  அத்துடன் தமிழக அரசின் ஊக்கத் தொகையை சேர்த்து அறிவித்தால் அது தான் கொள்முதல் விலை.

கடந்த பல ஆண்டுகளாக ஒரே அளவிலான தொகை தான் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதே தொகையையோ, அதை உயர்த்தியோ அறிவிப்பதற்கு அரசு இவ்வளவு தாமதம் செய்வது ஏன்? என்பது தெரியவில்லை.  முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தாலும் அரசு நிர்வாகம் எந்தவித இடையூறும், தடையும் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் நெல் கொள்முதல் விலையை அறிவித்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறக்க ஆணையிட வேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை மிகவும் குறைவாக இருப்பதால் தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக ரூ.2500 வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அறிக்கை காவிரிடாக்டர்நிறுவனர்நெல்பாசனம்பாமகராமதாஸ்
Comments (0)
Add Comment