அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் காணப்படும் குறைகளை அரசு நிவர்த்தி செய்யவேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோட்டூர்புரத்தில் 2010-ம் ஆண்டு ‘அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்’ கட்டப்பட்டது. பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இந்த நூலகம் சரியாக பராமரிக்காமல் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணி, ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வக்கீல்கள் ஆஷா, சுந்தரம் ஆகியோரை சட்ட கமிஷனர்களாக நியமித்து, நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த சட்ட கமிஷனர்கள் நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை தமிழக அரசு நிவர்த்தி செய்யவேண்டும் என்றும், நூலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்குளை வாடகைக்கு விட்டு வருமானத்தை பெருக்கவேண்டும் என்றும் ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் கமிஷனர்கள் ஆஷா, சுந்தரம் ஆகியோர் கூடுதல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், நூலகத்தில் உள்ள பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘வக்கீல் கமிஷனர்கள் அறிக்கையைப் பார்க்கும்போது, நூலகத்தில் சில பணிகள் நடந்துள்ளன. சில பணிகள் மேற்கொள்ள வேண்டியதுள்ளது. புதிதாக புத்தகங்கள் வாங்குவது, மின்னணு நூலகம் ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். மேலும், 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ரூ.31.66 கோடி வரியை (செஸ்) சென்னை மாநகராட்சி வசூலித்துள்ளது. இத்தொகையில், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது? என்பதையும் தெரிவிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நூலகத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல நூலகத்தில் உள்ள குறைகள் மற்றும் நடைபெறாத பணிகள் குறித்து மனுதாரர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐகோர்ட்டினால் நியமிக்கப்பட்ட வக்கீல் கமிஷனர்கள், நூலகத்துக்கு சென்று திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, கூடுதல் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர். அதில், நூலகத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படாத பணிகளை அட்டவணையிட்டு காட்டியுள்ளனர். எனவே அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பல பணிகளை இன்னும் மேற்கொள்ள வேண்டியதுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே, இந்த பணிகள் அனைத்தையும் தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் செய்து முடிக்கவேண்டும். அவ்வாறு பணி முடித்த பின்னர், அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். ஒருவேளை இந்த பணிகள் செய்து முடிக்கப்படவில்லை என்றால், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மீண்டும் இந்த ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும். விசாரணையை வருகிற பிப்ரவரி 26-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, 3 ஆண்டுகள் வசூலிக்கப்பட்ட செஸ் வரி விவரங்களை அரசு தரப்பில் விளக்கமளிக்கவில்லை என்று மனுதாரர் வக்கீல் வில்சன் கூறினார். அதையடுத்து பள்ளி கல்வித்துறை செயலர் ஒரு விவர அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நூலக பணிக்காக ரூ.16 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

இதை படித்து பார்த்த நீதிபதிகள், நூலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்குகளை வாடகைக்கு விடுவது, குடிநீர், சுத்தமான கழிவறை வசதிகளை செய்து கொடுப்பது ஆகிய பணிகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்

அண்ணாஅரசுஉத்தரவுஉயர்நீதிமன்றுகுறைகள்நினைவுநிவர்த்திநூற்றாடுநூலகம்
Comments (0)
Add Comment